பிளாட்பாரத்தில் நடந்து சென்ற பெண் ஓடும் ரெயிலில் சிக்கி சாவு
வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் நடந்து சென்ற பெண் ரெயிலில் சிக்கி பலியானார். கணவன், மகள் கண் எதிரிலேயே இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
ஜோலார்பேட்டை,
வாணியம்பாடி அருகே உள்ள ஏரி மின்னூரை சேர்ந்தவர் பாபு (வயது 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி (35), உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்ல கணவர் பாபு திட்டமிட்டார். அதன்படி மகேஸ்வரி, மகள் கோகிலாவுடன் பாபு நேற்று காலை 6.30 மணியளவில் வாணியம்பாடிக்கு வந்தார். அவர்கள் ரெயில் நிலையத்தின் 2-வது பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஜோலார்பேட்டையிலிருந்து காட்பாடி நோக்கி சென்ற ரெயில் அதிவேகமாக வந்தது. இந்த நிலையில் காற்று வேகமாக வீசியதால் மகேஸ்வரி அணிந்திருந்த சேலை முந்தானை பறந்து என்ஜினில் சிக்கியது. இதில் நிலைதடுமாறிய மகேஸ்வரி அடுத்த வினாடியே ஓடும் ரெயிலில் சிக்கி அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்தார். தங்களது கண் முன்பே மகேஸ்வரி இறந்ததை பார்த்து கணவர் பாபு, மகள் கோகிலா ஆகியோர் கதறினர். இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விரைந்து வந்து மகேஸ்வரியின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர், மகள் கண் எதிரிலேயே பெண் ரெயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த ராம்சரன்ராத்தியா என்பவரது மகன் திலிலோத்குமார் ராத்தியா (வயது 19). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். விடுமுறை எடுத்துக்கொண்டு அவர் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். பின்னர் நண்பர்கள் 3 பேருடன் திருச்செங்கோட்டிற்கு புறப்பட்டார்.
சத்தீஷ்கர் மாநிலம் கோர்பா என்ற ஊரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லும் ரெயிலில் பொதுப்பெட்டியில் அவர்கள் பயணம் செய்தனர். அந்த ரெயில் காட்பாடிக்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் வந்தது. அப்போது பொதுப்பெட்டியில் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் ரெயில் ஜோலார்பேட்டையை நோக்கி வந்து கொண்டிருந்தது. ரெயிலில் திலிலோத்குமார் ராத்தியா மற்றும் நண்பர்கள் படிக்கட்டின் அருகே நின்றவாறு பயணம் செய்தனர்.
ரெயில் நேற்று அதிகாலை 2.45 மணியளவில் வாணியம்பாடி அருகே வளையாபட்டு மேம்பாலம் அருகே வந்தபோது ஓடும் ரெயிலில் திடீரென படிக்கட்டிலிருந்து திலிலோத்குமார் ராத்தியா தவறி விழுந்தார். உடனே அவரது நண்பர்கள் அபாய சங்கிலியை இழுக்க முயன்றபோது கூட்ட நெரிசலால் முடியவில்லை.
அதற்குள் ரெயில் ஜோலார்பேட்டைக்கு வந்து விட்டது. அங்கு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் நண்பர்கள் 3 பேரும் புகார் அளித்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு வாணியம்பாடி வளையாபட்டு மேம்பாலத்துக்கு விரைந்தது. அங்கு தண்டவாளம் வழியாக சென்றபோது உயிருக்கு போராடிக்கொண்டிருந்த திலிலோத்குமார் ராத்தியாவை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்த அவரை டாக்டர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story