அதிகாலை 4 மணி முதல் மதுவிற்கும் டாஸ்மாக் கடை உடனடியாக அகற்ற கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
வந்தவாசி அருகே அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெறும் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.
இதில் வீட்டுமனைப்பட்டா, ரேஷன் கார்டு, முதியோர் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, வேலை வாய்ப்பு என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக சுமார் 400-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் இதற்கு முன்பு நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்தின்போது அளிக்கப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்தும் அவர் கேட்டறிந்தார். சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு வந்தவர்களை போலீசார் தீவிர சோதனைக்கு பின்னரே கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.
வந்தவாசி தாலுகா தெள்ளார் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நல்லூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த மாதம் 15-ந் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். டாஸ்மாக் கடை, அரசு விதிமுறைப்படி பகல் 12 மணியளவில் திறக்கப்பட வேண்டும். ஆனால் எங்கள் ஊரில் உள்ள டாஸ்மாக் கடையில் அதிகாலை 4 மணியில் இருந்து பகல் 12 மணி வரை திருட்டுத்தனமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.
மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்திலும் மதுபான பிரியர்கள் மது அருந்தி நாசம் செய்து வருகிறார்கள். விடுமுறை நாட்களிலும், பள்ளி வேலை நேரம் முடிந்த பிறகும் அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுபான பிரியர்கள் தங்களுடைய அராஜக செயல்களை அரங்கேற்றம் செய்து வருகிறார்கள். இதனால் கீழ்வில்லிவலம் கிராமத்தில் இருந்து நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வரும் மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அதேபோல் திருவண்ணாமலை, ஆரணி, போளூர், வந்தவாசி உள்ளிட்ட பகுதியில் ஏராளமான முதியவர்கள் முதியோர் உதவித் தொகை கேட்டு மனு அளித்தனர். கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் லோகநாயகி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story