இந்திய அளவில் தங்கம் வென்று சாதனை: சர்வதேச போட்டியில் பங்கேற்க உதவ வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை


இந்திய அளவில் தங்கம் வென்று சாதனை: சர்வதேச போட்டியில் பங்கேற்க உதவ வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 4 Sept 2018 4:00 AM IST (Updated: 4 Sept 2018 3:38 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச போட்டியில் பங்கேற்க உதவ வேண்டும் என இந்திய அளவில் தங்கம் வென்று சாதனை படைத்த மன்னார்குடி பளுதூக்கும் வீரர் கோவிந்தசாமி, திருவாரூர் கலெக்டர் நிர்மல்ராஜுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் பாரதிதாசன். கூலி தொழிலாளி. இவருடைய மகன் கோவிந்தசாமி. இவர் கடந்த மாதம் (ஆகஸ்டு) 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.

இதனால் சர்வதேச அளவில் சுவிட்சர்லாந்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) நடைபெற உள்ள போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க கோவிந்தசாமி தகுதி பெற்றார். இந்த நிலையில் சர்வதேச போட்டியில் பங்கேற்க உதவ வேண்டும் என அவர், திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது தந்தை சாதாரண கூலி தொழிலாளி என்பதால் சுமார் ரூ.2 லட்சம் செலவு செய்து சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பளு தூக்கும் போட்டியில் பங்கு பெற இயலாத சூழ்நிலையில் உள்ளேன். சர்வதேச போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்ட நிலையில் பணம் பற்றாக்குறை காரணமாக போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு சர்வதேச போட்டியில் பங்கு பெற உதவ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story