கணவருடன் ‘செல்பி’ எடுத்த சப்-இன்ஸ்பெக்டரின் மனைவிக்கு செருப்படி - ஏட்டு மனைவி ஆத்திரம்


கணவருடன் ‘செல்பி’ எடுத்த சப்-இன்ஸ்பெக்டரின் மனைவிக்கு செருப்படி - ஏட்டு மனைவி ஆத்திரம்
x
தினத்தந்தி 4 Sept 2018 4:29 AM IST (Updated: 4 Sept 2018 4:29 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கன்னங்குறிச்சியில் கணவருடன் ‘செல்பி’ எடுத்த சப்-இன்ஸ்பெக்டரின் மனைவியை ஏட்டு மனைவி செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னங்குறிச்சி,

சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையம் பின்புறம் போலீசாருக்கான குடியிருப்பு உள்ளது. இதில் ஒரு போலீஸ் உதவி கமிஷனர், 12 இன்ஸ்பெக்டர்கள், 90 ஏட்டுகள் மற்றும் போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் குடியிருப்பு பகுதியில் 2 பெண்களின் அலறல் சத்தம் கேட்டது. இதைக்கேட்டு அங்கிருந்தவர்கள் ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டதோ? என கருதி பயத்தில் வீட்டை விட்டு வெளியே வந்து எட்டி பார்த்தனர்.

அப்போது ஒரு சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி மற்றும் ஏட்டு மனைவி ஆகியோர் சண்டை போட்டு கொண்டு இருந்தனர். அங்கு குடியிருந்தவர்கள் இதைப்பார்த்து ஓடி வந்து இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், குடியிருப்பில் வசிக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மனைவி எதிர் குடியிருப்பில் வசிக்கும், ஏட்டுவுடன் கடந்த வாரம் வெளியே சென்றுள்ளார். பின்னர் அங்கு அவர்கள் இருவரும் ஆசையாக ஒரு ‘செல்பி’ எடுத்து கொண்டனர். நேற்று ஏட்டுவின் மகள் அவருடைய செல்போனை எடுத்து விளையாடினார். அப்போது தனது தந்தை எதிர் வீட்டில் வசிக்கும் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியுடன் சிரித்தவாறு போட்டோவில் இருந்ததை பார்த்தார்.

பின்னர் அவர் தனது தாயிடம் தந்தை வேறு ஒரு பெண்ணுடன் ‘செல்பி’ எடுத்துள்ளதாகவும், அந்த படத்தை செல்போனில் வைத்து உள்ளதாகவும் தெரிவித்தார். பின்னர் ஏட்டு மனைவி மகளிடம் இருந்த செல்போனை வாங்கி பார்த்தார். அதில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மனைவி தனது கணவருடன் ‘செல்பி’யில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஏட்டு மனைவி, சப்-இன்ஸ்பெக்டர் மனைவியிடம் ஏன் இவ்வாறு செய்கிறாய்?, நான் குழந்தைகளுடன் நிம்மதியாக இங்கு வாழ வேண்டாமா? என கேட்டு சத்தம் போட்டுள்ளார். அப்போது இதைக்கேட்ட அவர் நான் எதற்காக அவருடன் செல்ல போகிறேன் என கூறி மறுத்தார். உடனே ஏட்டு மனைவி செல்போனில் நீ, என்னுடைய கணவருடன் ‘செல்பி’ எடுத்ததை பார் என அந்த படத்தை காண்பித்து கேட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஏட்டுவின் மனைவி தன் காலில் இருந்த செருப்பை எடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் மனைவியின் கன்னம் மற்றும் உடலில் சரமாரியாக அடித்தார். மேலும் இருவரும் மாறி மாறி கையால் தாக்கியும், தலைமுடியை பிடித்துக்கொண்டும், ஆபாசமான வார்த்தையால் திட்டி சண்டை போட்டுக்கொண்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு இன்ஸ்பெக்டர் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் மனைவிக்கும், ஏட்டுவுக்கும் சில மாதங்களாக தொடர்பு இருந்து வந்ததாகவும், இதுகுறித்து ஏற்கனவே அதிகாரிகள் ஏட்டுவை எச்சரித்து உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஏட்டு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story