துமகூருவில் வெற்றி ஊர்வலத்தின்போது காங்கிரஸ் தொண்டர்கள் 25 பேர் மீது திராவகம் வீச்சு


துமகூருவில் வெற்றி ஊர்வலத்தின்போது காங்கிரஸ் தொண்டர்கள் 25 பேர் மீது திராவகம் வீச்சு
x
தினத்தந்தி 4 Sept 2018 5:18 AM IST (Updated: 4 Sept 2018 5:18 AM IST)
t-max-icont-min-icon

துமகூருவில் வெற்றி ஊர்வலத்தின்போது காங்கிரஸ் தொண்டர்கள் 25 பேர் மீது திராவகம் வீசப்பட்டது. இதில் 25 பேரும் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 31-ந் தேதி நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. துமகூரு(மாவட்டம்) டவுன் 16-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளராக இனாயத்துல்லா கான் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் வெளியான போது 16-வது வார்டில் இனாயத்துல்லா கான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியை இனாயத்துல்லா கான், அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

பின்னர் தேர்தல் அலுவலகத்தில் இருந்து இனாயத்துல்லா கான் வீட்டிற்கு, அவரது ஆதரவாளர்களான காங்கிரஸ் தொண்டர்கள் வெற்றியை கொண்டாடியப்படி ஊர்வலமாக புறப்பட்டு சென்றார்கள். துமகூரு டவுன் மெயின் ரோட்டில் ஊர்வலம் வரும் போது மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த திராவகத்தை (ஆசிட்) ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வீசினார்கள். அந்த திராவகம் 25-க்கும் மேற்பட்டவர்கள் மீது பட்டதால், அவர்களது முகம், கழுத்து, முதுகு பகுதிகள் வெந்து போனது. அவர்கள் வலி தாங்க முடியாமல் துடிதுடித்தார்கள்.

உடனே 25-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறிந்ததும் துமகூரு டவுன் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றதை பிடிக்காமல் வேண்டும் என்றே சில மர்மநபர்கள் வெற்றி ஊர்வலத்தில் தொண்டர்கள் மீது திராவகத்தை ஊற்றியது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், திராவகத்தை வீசிய மர்மநபர்களை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் தொண்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதானமாக பேசி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து துமகூரு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த சம்பவம் துமகூருவில் நேற்று பர பரப்பை ஏற்படுத்தியது.

Next Story