கல்வியின் கண் திறப்போம்!


கல்வியின் கண் திறப்போம்!
x
தினத்தந்தி 4 Sept 2018 9:30 AM IST (Updated: 4 Sept 2018 9:30 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தனித்துவம் மிக்க தத்துவப் பேரறிஞர். ஆசிரியராய் பணியாற்றிய அறிவுலக மேதை. அவரது பெயரிலேயே இருக்கிறது, கல்வியின் இருப்பிடம்.

ஆம்... நம் சாதனை நாயகரின் பெயர் சர்வ ‘பள்ளி’ ராதாகிருஷ்ணன். அவர் குடியரசுத் தலைவராய் இருந்தவர் மட்டுமல்ல, இந்தியர்களின் இதயங்களிலும் குடியிருந்தவர்.

பல்வேறு கலைகளைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை குரு என்றும் ஆசான் என்றும் நாம் கொண்டாடுகிறோம். கல்விக் கண்களை திறந்து வைப்பவர்கள் என்று கை குவிக்கிறோம். ஆனால், கல்வியின் கண்களை யார் திறப்பது?

தொடக்கப்பள்ளி முதல் பல் கலைக்கழகம் வரை அணி செய்து பணி செய்பவர்களே ஆசிரியர்கள். ஆரம்பப்பள்ளியில் அடியெடுத்து வைத்து ஒன்றாம் வகுப்பில் உட்கார்கிறபோதே, மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் நடுவே தொடர்பும் உறவும் தொடங்கிவிடுகிறது. பண்பாட்டின் பயிற்சி வகுப்பு அம்மா, அப்பாவுக்கு அடுத்தாற் போல், ஆசிரியர்களிடம் இருந்துதான் அறிமுகமாகிறது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கைவிரல்களைப் பிடித்துக்கொண்டுதான் கல்விக் கோவிலுக்குள் நாம் காலடியெடுத்து வைக்கிறோம். நம்மை வீரியமான விதைகளாய் விதைப்பது பள்ளி ஆசிரியர்களின் பாச விரல்களே! பரிவான குரல்களே!

ஆசிரியர்களும் பேராசிரியர்களும் தான் உயர்ந்த சிந்தனைகளை நம் உள்ளத்துக்குள் போய் உட்கார வைக்கிறார்கள். உயர்வான ஒரு சமூகத்தின் உருவாக்கம் ஆசிரியர்களிடம் இருந்துதான் ஆரம்பிக்கிறது. நாளைய அறிவுலகச் சிற்பிகளையும், ஆய்வுலகச் சிகரங்களையும் அடையாளம் கண்டு ஆட்கொள்பவர்களும், அறிமுகம் செய்கிறவர்களும் ஆசிரியர்களே!

எந்த நாட்டிலும் எந்தத்துறையிலும் வித்தகர்களாகி வெற்றி பெறுகிறவர்கள் ஆசிரியர்களால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே. நல்லாசிரியர்கள் உள்ளம் எனும் உலைக் கூடத்தில் ஒளி வீசும் ஆபரணங்களாய் உருவாக்கப்பட்டவர்களே.

பெற்றோர் பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கலாம். அப்பிள்ளைகளைப் பெயர் பெற்ற பிள்ளைகளாய், புகழ் பெற்ற பிள்ளைகளாய் ஆக்குபவர் யார்? தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அடுத்தடுத்த படிக்கட்டுகளாய் உயர்ந்து நம்மையும் உயர்த்தி ஆளாக்கும் ஆசிரியர்களே!

அதனால் தான் ‘எழுத்தறிவித்தவன் இறைவன்’ என்றும் ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்றும் தமிழ்மொழி ஆசிரியர்களை இறைவனுக்குச் சமமாக அங்கீகரிக்கிறது. நாடு நல்லாசிரியர் விருது கொடுத்து நன்றி செலுத்துகிறது.

ஆனால், இன்றைய சூழலில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் அறிவுலகின் வழிகாட்டிகள் என்று ஆராதிக்கப்படும் சமுதாயத்தில் ஒரு சிலரைப் பற்றி செவியில் விழும் செய்திகளில் அடிப்பட்டு நம் இதயம் அதிர்கிறது. ஏதேதோ எண்ணங்கள் உதிர்கின்றன. காலத்தின் கனவுகள் கருச்சிதைவாகின்றன. தலைநிமிர்ந்து பறக்க வேண்டிய கல்விக்கொடி, வெறும் காகிதத்தின் கொடியாகிக் காற்றில் படபடக்கிறது. அதையும் கம்பங்கள் கிழிக்கின்றன. கரையான்கள் அரிக்கின்றன.

வார்த்தைகளில் சொல்ல முடியாத கறைகளுக்கும் களங்கங்களுக்கும் காரணமான ஒரு சிலரால் ஒவ்வொரு நல்லாசிரியர் உள்ளமும் உடைந்து, நொறுங்கிச் சிதறிப் பதறுகிறது. உச்சத்தில் வைத்து பார்த்துக்கொண்டிருந்த சிலரை இப்போது அச்சத்தில் வைத்து பார்த்துக்கொண்டு இருக்கும் அவலத்தை என்னென்பது?

உடைகளைச் சலவை செய்தால் போதாது, சிலர் உள்ளங்களையும் சலவை செய்ய வேண்டும் என்பதை உணர்வோம்! உணர்த்துவோம்! இந்த தேசத்தின் நடக்கும் கோவில்களாய் இன்றும் ஆயிரம் ஆயிரம் நல்லாசிரியர்கள் நடமாடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை உய்த்துணர்ந்து போற்றுவோம்! அவர்தம் நினைவுகளை உள்ளத்திலும் இல்லத்திலும் தீபங்களாய் ஏற்றுவோம்!

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் எனக்கு பாடம் நடத்தி, என்னை பயிரிட்ட ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் என் மனம் பாசத்தோடும் பக்தியோடும் இப்போதும் எண்ணிப் பார்க்கிறது. இன்றும் அவர்கள் என் உள்ளத்தில் உற்சவ மூர்த்திகளாய் உலாவந்து கொண்டிருக்கிறார்கள். என் நாட்களெல்லாம் அவர்களுக்கு நன்றி செலுத்திவிட்டுதான் நகர்ந்துகொண்டு இருக்கின்றன.

எனக்குள் என்னைச் சமைத்த ஆசிரியர்களும் பேராசிரியர்களும் பலர். ஒருவரைப் பற்றி மட்டும் இப்போது உரையாடுகிறேன். அவர் இப்போது அமரர் ஆகிவிட்டார்.

எட்டாம் வகுப்பு வரை நான் படித்த பெரியகுளம் வடகரை நகராட்சித் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர். அவருடைய பெயர் சுப்ரமணியம். கே.எஸ். என்று பெரியவர்கள் அவரை அழைப்பார்கள். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் இளங்கலை மாணவனாய் நான் சேர்ந்திருந்த நேரம் அது. அப்போது தான் என் ஆரம்பப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.எஸ். பணிநிறைவு செய்து பள்ளியில் இருந்தும், பணியில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

பாடமும் பாசமும் எங்களுக்கு கற்றுத் தந்த அந்த ஆசிரியர் பெருந்தகைக்கு பாராட்டு விழா நடத்திடப் பழைய மாணவர்கள் ஒன்று கூடினோம். நான் முன் நின்று அவ்விழாவை நடத்தினேன். அவ்விழாவில் ‘அகமெல்லாம் நிறைந்த என் ஆசிரியருக்குப் பாராட்டு மடல்’ என்று வாசித்து வழங்கினோம். அம்மடலை நான் மரபுக் கவிதையில் எழுதியிருந்தேன். அக்கவிதையின் தொடக்க வரிகள் இவை;

“ஆசிரியப் பெருந்தகையே! எங்கள் நெஞ்சின்
அணையாத ஒளிவிளக்கே! அன்பு காட்டி
ஏசுவைப் போல் வாழ்பவரே! புத்தர் போல
இதயத்தால் சிறந்தவரே! உளத்தில் பூத்த
மசாறியாத் தாமரையே! மலரே! ‘சுப்ரமணியம்’ எனும் பெயருடைய நிலவே! எங்கள்
பாசமெலாம் உன் மீது! உன்னைச் சுற்றிப்
படர்கின்ற கொடிமுல்லைக் கூட்டம் நாங்கள்!”

இத்தகைய கவிதைகளின் நாயகர்களாய் வாழும் ஆசிரியப் பெருந்தகைகள் இன்னும், இன்றும், இப்போதும் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு வாழ்த்தி மகிழ்வோம்.

-கவிஞர் மு.மேத்தா, தமிழ்ப் பேராசிரியர்

Next Story