நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம் பதிவு செய்யாத விசைப்படகுகளை மீன் பிடிக்க அனுமதிக்கக்கூடாது என கோரிக்கை


நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தம் பதிவு செய்யாத விசைப்படகுகளை மீன் பிடிக்க அனுமதிக்கக்கூடாது என கோரிக்கை
x
தினத்தந்தி 4 Sept 2018 4:00 PM IST (Updated: 4 Sept 2018 4:00 PM IST)
t-max-icont-min-icon

பதிவு செய்யாத விசைப்படகுகளை மீன்பிடிக்க அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நாட்டுப்படகு மீன்வர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி, 

பதிவு செய்யாத விசைப்படகுகளை மீன்பிடிக்க அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நாட்டுப்படகு மீன்வர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நாட்டுப்படகு மீனவர்கள்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதால், பாரம்பரிய மீனவர்களின் பலகோடி மதிப்பிலான வலைகள் சேதம் அடைந்து வருகின்றன. சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

ஆகையால் பதிவு செய்யாமல் மீன்பிடித்து வரும் படகுகளை மீன்பிடிக்க அனுமதிக்கக்கூடாது. சட்டப்படி அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த பின்னர் தான் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நாட்டுப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5 ஆயிரம் படகுகள்

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன. அதே போன்று பெரும்பாலான மீனவ கிராமங்களில், கடற்கரையோரங்களில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டு இருந்தன.

தூத்துக்குடி இனிகோநகர் பகுதியில் மீனவர் ஜோசப் தலைமையில் மீனவர்கள் கருப்பு கொடியுடன் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதே போன்று மாவட்டத்தில் பல இடங்களில் மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தற்காலிக சான்று

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

விசைப்படகுகளை பொறுத்தவரை உச்சநீதிமன்றம் தற்காலிக பதிவு சான்று வழங்க உத்தரவிட்டு இருந்தது. அதன்படி அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப உதவிக்காக மத்திய கடல் வாணிப துறையை அணுகி உள்ளோம். இது குறித்து நாட்டுப்படகு மீனவர்களுக்கு விளக்கி கூறப்படும்.

சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், 24 மீட்டர் நீளம், 240 எச்.பி. திறன் கொண்ட மோட்டார் என்ஜின்கள் பொருத்தப்பட்ட விசைப்படகுகளை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல படகுகளில் 240 எச்.பி.யை விட அதிக திறன் கொண்ட என்ஜின்கள் உள்ளன. மீனவர்கள் அந்த என்ஜின்களை மாற்றுவதற்காக, அவர்கள் வங்கிக்கடன் பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 24 மீட்டர் நீளம், 240 எச்.பி.க்கு அதிகமாக சுமார் 60 படகுகள் உள்ளன.

இந்த படகுகள் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு பதிவு செய்ய கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன்பேரில் தற்காலிக சான்று வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நிச்சயமாக தற்காலிக சான்று வழங்குவோம். அதன்பிறகு மத்திய கடல் வாணிப துறை சட்டத்தின்படி படகுகளை ஆய்வு செய்வோம். அதற்கு முன்பு படகுகள் உரிய வர்ணம் அடிக்க வேண்டும். எந்த பகுதியில் மீன்பிடிக்க வேண்டும் என்று வரையறை செய்ய வேண்டும். இந்த பணிகள் ஒரு வாரத்துக்குள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story