தவிடு, உமி பறப்பதால் சுகாதார சீர்கேடு நுகர்வோர் வாணிப கிடங்கை முற்றுகையிட்ட பொதுமக்கள்
தவிடு, உமி பறப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி நுகர்வோர் வாணிப கிடங்கை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி ஜோதி நகரில் நுகர்பொருள் வாணிப கிடங்கு உள்ளது. இங்கு தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நெல்லை அரைத்து அரிசியாக்கி ரேஷன் கடை, சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இந்த நிலையில் நெல்லை அரைத்த பிறகு கிடைக்கும் தவிடு, உமி போன்றவற்றை சரியாக பராமரிக்காமல் மலைபோல் குவித்து வைத்து உள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக இரவு நேரங்களில் காற்றில் பறக்கும் தவிடு, உமி போன்றவற்றால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி நுகர்பொருள் வாணிப கிடங்கை நேற்று முன்தினம் இரவு பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் நுகர்பொருள் வாணிப கிடங்கு நுழைவு வாயிலுக்கு நேற்று மீண்டும் பொதுமக்கள் திரண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து அரிசி மூட்டைகளை வெளியே கொண்டு செல்ல முயன்ற லாரிகளை தடுத்து நிறுத்தினார்கள். அதன்பின்னர் நுழைவு வாயிலுக்கு பூட்டு போட்டு பூட்டினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ரத்தினகுமார், பரமேஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து பிடித்து வந்த புழுக்கள், வண்டுகளை காண்பித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதை தொடர்ந்து பொதுமக்களில் ஒரு சிலரை மட்டும் உள்ளே அழைத்து சென்று, அங்குள்ள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது நுகர்பொருள் வாணிப கிடங்கு 3 நாட்களில் சுத்தம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறியதாவது:– நுகர்வோர் வாணிப கிடங்கில் நெல்லை அரைத்தது போக தவிடு, உமி போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்துவதில்லை. குறிப்பாக மருந்து சரிவர தெளிப்பது இல்லை. திறந்தவெளியில் உமி, தவிடு ஆகியவை கொட்டி வைத்து உள்ளதால் அவை காற்றில் பறந்து வீடுகளுக்குள் வந்து விழுகிறது. மேலும் சிறிய, சிறிய வண்டுகள், புழுக்கள் வீடுகளுக்குள் வருவதால் அலர்ஜி மற்றும் தொற்று நோய் பரவுகிறது. வாணிப கிடங்கு வளாகம் புதர் மண்டி கிடப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நுகர்வோர் வாணிப கிடங்கை கடந்த 15 நாட்களுக்கு முன் முற்றுகையிட்ட போது தவிடு, உமி போன்றவற்றை அப்புறப்படுத்துவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நுகர்பொருள் வாணிப கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைபோல் குவித்து வைத்து உள்ள உமி, தவிடு ஆகியவற்றை 3 நாட்களில் அப்புறப்படுத்துவதாக தெரிவித்து உள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் இங்கிருந்து எந்த லாரிகளையும் உள்ளே விடமாட்டோம். லாரிகளை வெளியே செல்லவும் அனுமதிக்க மாட்டோம். இதற்கு நிரந்தர தீர்வு காணும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.