மின்துறை தலைமை அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம்
மின்துறை தலைமை அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது, 50 சதவீத தெரு விளக்குகள் எரிவது இல்லை, ஹைமாஸ் விளக்குகள் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது, புதியதாக பொருத்தப்பட்டுள்ள மின் மீட்டர்களால் மின்கட்டணம் அதிக அளவில் வருகிறது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாநில பா.ஜ.க.வினர் மின்துறை தலைமை அலுவலகத்தில் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். போராட்டத்தில் துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச்செயலாளர்கள் ரவிச்சந்திரன், தங்க விக்ரமன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்த உடன் கண்காணிப்பு பொறியாளர் ரவி அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மின்துறையில் போதுமான நிதி இல்லை. தற்போது தான் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. எனவே விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.
இது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுச்சேரிக்கு தேவையான மின்சாரத்தைவிட கூடுதலாகவே மத்திய அரசு தருகிறது. ஆனால் அதை முழுவதும் பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்காமல் மாநில அரசு திருப்பி அனுப்பி வருகிறது. புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த பணி முழுமையாக முடிக்கப்படாமல் 50 சதவீத அளவே முடிந்துள்ளது. தற்போது பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அதுபோல் தெருவிளக்குகளில் 50 சதவீதத்திற்கு மேல் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை ஆகியவை நடைபெறுகிறது. மின்துறையில் பழைய மின்மாற்றிகள் உள்ளிட்ட பொருட்களையே பயன்படுத்துகின்றனர். இதுவும் மின் வெட்டுக்கும், மின் இழப்புக்கும் காரணமாக உள்ளது. முதல்–அமைச்சர் நாராயணசாமி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவர் மின்துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கி கொடுக்க வில்லை. அதனை ஒதுக்கி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.