தென்காசி அருகே நடிகர் விஷாலின் கார் டிரைவர் உடல்நலக்குறைவால் சாவு சிகிச்சைக்கு உதவி செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக தந்தை குற்றச்சாட்டு
தென்காசி அருகே நடிகர் விஷாலின் கார் டிரைவர் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது சிகிச்சைக்கு விஷால் உதவி செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக தந்தை குற்றம் சாட்டினார்.
தென்காசி,
தென்காசி அருகே நடிகர் விஷாலின் கார் டிரைவர் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது சிகிச்சைக்கு விஷால் உதவி செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக தந்தை குற்றம் சாட்டினார்.
விஷாலின் கார் டிரைவர்நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள பாலமார்த்தாண்டபுரத்தை சேர்ந்தவர் கண்ணதாசன். இவருடைய மகன் பாண்டியராஜ் (வயது 22). இவர் நடிகர் விஷாலிடம் 3 ஆண்டுகள் டிரைவராகவும், 2 ஆண்டுகள் அலுவலக உதவியாளராகவும் வேலை பார்த்தார்.
பாண்டியராஜிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து பார்த்த போது பாண்டியராஜிக்கு கணையத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு 2 மாதங்கள் சிகிச்சை பெற்றார். மேலும் தொடர்ந்து சிகிச்சை பெற வசதி இல்லாததால் பாண்டியராஜை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். இந்த நிலையில் வீட்டில் இருந்த பாண்டியராஜ் நேற்று பரிதாபமாக இறந்தார்.
தந்தை குற்றச்சாட்டுஇதுகுறித்து அவரது தந்தை கண்ணதாசன் கூறியதாவது:–
நான் டீக்கடை நடத்தி வருகிறேன். எனது மகன் பாண்டியராஜ், நடிகர் விஷாலிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தான். அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும், விஷால் தரப்பில் இருந்து ஆஸ்பத்திரியில் சேருங்கள், சிகிச்சைக்கு உதவி செய்கிறோம் என்று கூறினார்கள். அதை நம்பி மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவனை சேர்த்தோம்.
எனது வீட்டில் இருந்த நகைகள் மற்றும் எனது மனைவியின் தாலி போன்றவற்றை விற்றும், சிலரிடம் கடன் வாங்கியும் சுமார் ரூ.6 லட்சம் வரை செலவு செய்தோம். ஆனால் மேலும் செலவு செய்ய வழி இல்லை. எனவே, நாங்கள் அவனை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டோம். பாண்டியராஜ் ஆஸ்பத்திரியில் இருந்த வரையிலும் சரி, இப்போது வரையிலும் சரி விஷால் தரப்பில் இருந்து யாரும் வந்து உதவி செல்லவில்லை. அவர்கள் ஏமாற்றி விட்டனர். அவர்கள் கூறியதை நம்பிதான் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். சரியான நேரத்தில் நடிகர் விஷால் உதவி செய்திருந்தால் எனது மகன் பிழைத்திருப்பான். பாண்டியராஜிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார்.