புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணியில் பக்தர்கள் புனிதநீராட ஏற்பாடு கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு


புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணியில் பக்தர்கள் புனிதநீராட ஏற்பாடு கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு
x
தினத்தந்தி 4 Sep 2018 10:30 PM GMT (Updated: 4 Sep 2018 2:05 PM GMT)

புஷ்கர விழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் புனித நீராட வசதியாக படித்துறைகளில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

ஸ்ரீவைகுண்டம்,

புஷ்கர விழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் புனித நீராட வசதியாக படித்துறைகளில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

புஷ்கர விழா

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தாமிரபரணி புஷ்கர விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 12–ந்தேதி தொடங்கி, 12 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தாமிரபரணி ஆறு பாயும் பகுதிகளில் புனித நீராட உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் புனித நீராடும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவது தொடர்பாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று காலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அவர் முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, முக்காணி ஆகிய இடங்களில் தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் இறங்கி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

முறப்பநாடு கைலாசநாதர் கோவிலில் இருந்து நங்கமுத்தம்மன் கோவில் வரையிலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள படித்துறையை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கு பழுதடைந்த படித்துறையை சீரமைக்கவும், படித்துறை இல்லாத இடங்களில் புதிதாக படித்துறை அமைக்கவும் உத்தரவிட்டார்.

பின்னர் அவர், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் பின்புறம் உள்ள திருமஞ்சன படித்துறையையும், ஆழ்வார்திருநகரி சங்கனி படித்துறையையும், முக்காணி பெருமாள் கோவில் படித்துறை, விநாயகர் கோவில் படித்துறையையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

முன்னதாக ஸ்ரீவைகுண்டத்தில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

53 குளங்களை நிரப்ப...

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. கடந்த மாதம் (ஆகஸ்டு) 15–ந்தேதிக்கு பிறகு தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4 பிரதான கால்வாய்களில் முழு கொள்ளளவான வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு 53 குளங்களை முழுவதும் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை, வருவாய் துறை மற்றும் இதர துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

புனித நீராட வசதி

அடுத்த மாதம் (அக்டோபர்) 12–ந்தேதி தாமிரபரணி புஷ்கர விழா தொடங்குகிறது. இதையொட்டி தாமிரபரணி ஆற்றின் முக்கிய படித்துறைகளான முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, முக்காணி ஆகிய இடங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு புனித நீராட பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கலந்து கொண்டவர்கள்

அவருடன் உதவி கலெக்டர்கள் பிரசாந்த் (தூத்துக்குடி), கோவிந்தராசு (திருச்செந்தூர்), தாசில்தார்கள் சந்திரன் (ஸ்ரீவைகுண்டம்), மலர்தேவன் (ஏரல்), அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர்கள் சந்திரவேல் (ஸ்ரீவைகுண்டம்), ராமசுப்பிரமணியன் (ஆழ்வார்திருநகரி), யூனியன் ஆணையாளர் சுடலை மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story