புதுக்கடை அருகே லாரி மோதி 2 பேர் பலி திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது பரிதாபம்


புதுக்கடை அருகே லாரி மோதி 2 பேர் பலி திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 4 Sep 2018 10:45 PM GMT (Updated: 4 Sep 2018 3:33 PM GMT)

புதுக்கடை அருகே திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது, லாரி மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

புதுக்கடை,

குமரி மாவட்டம், புதுக்கடை அருகே உதச்சிக்கோட்டை, குழிஞ்ஞன்விளையை சேர்ந்தவர் செல்லன். இவருடைய மகன் நடராஜ் (வயது 30), தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவருடைய அண்ணன் ரமேசுக்கு வருகிற 12–ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து திருமண ஏற்பாடுகளை குடும்பத்தினருடன் சேர்ந்து நடராஜும் கவனித்து வந்தார்.

நேற்று காலையில் நடராஜ் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஸ்கூட்டியில் புறப்பட்டார். அவர் உதச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளி அருகே உள்ள உறவினருக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு, ஸ்கூட்டியில் புறப்பட்ட தயாரானார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் (65) என்பவர் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அவரை கண்டதும் நடராஜ், ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு அதில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தார்.


அப்போது, அந்த வழியாக காப்புக்காடு உணவு குடோனில் இருந்து அரிசி மூடைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. லாரியை சூரியகோடு பகுதியை சேர்ந்த அஜித் குமார் (35) என்பவர் ஓட்டி வந்தார். வேகமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த நடராஜ், தங்கராஜ் மீது மோதியது. இதில் அவர்கள் இருவரும் லாரி சக்கரத்தில் சிக்கினர். கண்ணிமைக்கும் நேரத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். மேலும், மோட்டார் சைக்கிளும் லாரியின் அடியில் சிக்கி நொறுங்கியது.

இதற்கிடையே லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. அதில் இருந்த அரிசி மூடைகள் சாலையில் சிதறி விழுந்தன. லாரி டிரைவர் அஜித்குமார் இறங்கி தப்பி ஓடினார். லாரியில் இருந்த லோடு மேன்கள் பைங்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ், தேங்காப்பட்டணத்தை சேர்ந்த ஜெயகுமார் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.


விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு கூடினர். அத்துடன் தகவல் அறிந்த உறவினர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

இந்த விபத்து குறித்து புதுக்கடை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணங்களை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், புதுக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அண்ணனுக்கு திருமணம் நடைபெறவுள்ள நிலையில் வாலிபர் இறந்ததால் அவரது உறவினர்கள் மிகவும் சோகமடைந்தனர். இந்த விபத்து காரணமாக நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story