திருமணமான 6 மாதத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய பெண் போலீசார் விசாரணை
புவனகிரி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனகிரி,
கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த கீழ்புவனகிரி சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்தவர் சீனுவாசன் மகள் மாலதி(வயது 32). இவருக்கும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ரவிசங்கர்(35) என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மாலதி தனது கணவர், மாமனார், மாமியாருடன் சென்னையில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். ரவிசங்கர் சென்னையில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
மாலதி, தனது கணவரிடம் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். ஆனால் அதற்கு ரவிசங்கர் மறுப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மாலதி தனது கணவரை பிரிந்து கீழ்புவனகிரியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாலதியின் தாய் ராஜாத்தி(57) கடைக்கு சென்றுவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, மாலதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார்.
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், புவனகிரி இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாலதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து ராஜாத்தி புவனகிரி போலீசில் புகார் கொடுத்தார். அதில் எனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் வரதட்சணை கொடுமையால் அவர் இறந்தாரா? என்பது குறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.