“தவறான சிகிச்சையால் 18 ஆண்டுகளாக கோமாவில் உள்ள தாயாருக்கு இழப்பீடு வேண்டும்” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிக்கு, கல்லூரி மாணவி கடிதம்


“தவறான சிகிச்சையால் 18 ஆண்டுகளாக கோமாவில் உள்ள தாயாருக்கு இழப்பீடு வேண்டும்” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிக்கு, கல்லூரி மாணவி கடிதம்
x
தினத்தந்தி 5 Sept 2018 4:15 AM IST (Updated: 4 Sept 2018 11:58 PM IST)
t-max-icont-min-icon

தவறான சிகிச்சையால் 18 ஆண்டுகளாக கோமா நிலையில் உள்ள தனது தாயாருக்கு இழப்பீடு அளிக்கவும், நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கும்படி மதுரை ஐகோர்ட்டு நீதிபதிக்கு, குமரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி கடிதம் எழுதி உள்ளார்.

மதுரை,

கன்னியாகுமரி மாவட்டம் பொன்மனை பகுதியை சேர்ந்தவர் ஆதர்ஷா. இவர் மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில், அவர் கூறியிருந்ததாவது:–

எனக்கு வயது 18 ஆகிறது. தற்போது நான் பி.ஏ. ஆங்கிலம் 2–ம் ஆண்டு படித்து வருகிறேன். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு என் தாயாரை பிரசவத்துக்காக குலசேகரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது நான் பிறந்துள்ளேன். அந்த சமயத்தில் எனது தாயார் சோபனாவுக்கு அளித்த சிகிச்சை பலனின்றி, அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.

கடந்த 18 ஆண்டுகளாக அவர் கோமா நிலையிலேயே உள்ளார். எனது தந்தை எங்களை விட்டு பிரிந்து வேறு திருமணம் செய்து கொண்டார். நானும் எனது தாயாரும் வாழ வழியின்றி கஷ்டப்பட்டு வருகிறோம்.

அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சைக்காக இழப்பீடும், தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கவும் எந்த உதவியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கு நுகர்வோர் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனது தாயாருக்கான மருத்துவ சிகிச்சைக்கும், எனது படிப்புக்கும் பணம் இல்லாமல் தவித்து வருகிறோம். எனவே தவறான சிகிச்சையால் கோமா நிலைக்கு சென்ற எனது தாயாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் எழுதி இருந்தார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் மாணவி கூறிய பிரச்சினை குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஐகோர்ட்டு சார்பில் வக்கீல் என்.தமிழ்மணி ஆஜரானார்.

அப்போது, மனுதாரரின் தகவல் மற்றும் கோரிக்கை குறித்த உண்மை நிலையை கண்டறிந்து கோர்ட்டில் தெரிவிக்க அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 10–ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story