விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்


விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 4 Sep 2018 10:45 PM GMT (Updated: 4 Sep 2018 6:42 PM GMT)

விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன் தலைமையில் நடந்தது.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், சூனாம்பேடு, அச்சரப்பாக்கம், செய்யூர், உத்திரமேருர், படாளம் உள்ளடங்கிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பாதுகாப்பு மற்றும் சிலைகள் வைக்க பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன் தலைமையில் மதுராந்தகத்தில் நடந்தது. இன்ஸ்பெக்டர்கள் அந்தோணி ஸ்டாலின், வடிவேல்முருகன், சுரேந்தர்குமார், வெங்கடேசன், அமல்ராஜ் , ரமேஷ், நாகலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் விநாயகர் சிலை வைப்பதற்கு தடையில்லாசான்று பெறவேண்டும். ஒலிபெருக்கி சம்பந்தமாக போலீசாரிடம் அனுமதி பெறவேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டுமே வைக்க வேண்டும். சிலைகள் மீது ரசாயனம் பூசக்கூடாது. சிலையின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்கக்கூடாது. கல்வி நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், மதவழிப்பாட்டு இடங்கள் அருகில் சிலைகள் வைக்கக்கூடாது. சிலை ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது சிலை ஊர்வலத்துக்கு மினிலாரி, டிராக்டர் போன்ற வாகனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் சுங்குவார்சத்திரத்தில் நடந்தது. இதில் சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு விநாயகர் சிலைகள் வைக்க தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து விளக்கி கூறினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்துமுன்னணி அமைப்பை சேர்ந்தவர்களும், பா.ஜ.க. நிர்வாகிகளும், பொதுமக்களும் போலீசாரும் கலந்து கொண்டனர்.

Next Story