காவிரி குடிநீர் வினியோக பணிகளை கலெக்டர் ஆய்வு


காவிரி குடிநீர் வினியோக பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Sept 2018 4:00 AM IST (Updated: 5 Sept 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

காவிரி குடிநீர் வினியோக பணிகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா நேற்று ஆய்வு செய்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் நகராட்சி, குரும்பலூர் பேரூராட்சி மற்றும் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் அமைந்துள்ள 116 வழியோர கிராமங்களில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி காவிரி குடிநீர் வினியோக பணிகளை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா நேற்று ஆய்வு செய்தார். திருச்சி மாவட்டம் தாளக்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் உள்ள நீர் சேகரிப்பு கிணற்றில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கூறியதாவது:- பெரம்பலூர் நகராட்சியில் வசிக்கும் 49 ஆயிரத்து 500 மக்களுக்கு நாள் ஒன்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட 2.44 மில்லியன் லிட்டரில் 2.00 மில்லியன் லிட்டரும், குரும்பலூர் பேரூராட்சியில் 12 ஆயிரத்து 136 மக்களுக்கு, 0.85 மில்லியன் லிட்டரில், 0.30 மில்லியன் லிட்டரும், 116 வழியோர கிராம குடியிருப்புகளில் உள்ள ஒரு லட்சத்து ஆயிரத்து 987 மக்களுக்கு 5.40 மில்லியன் லிட்டரில், 3.74 மில்லியன் லிட்டரும் என மொத்தம் நாள் ஒன்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட 8.69 மில்லியன் லிட்டரில், 6 மில்லியன் லிட்டர் குடிநீர் தற்போது வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. மேற்படி ஆழ்குழாய், நீர் உறிஞ்சு கிணற்றின் இணைப்பு குழாய்கள் மற்றும் மின் கடத்தி வயர்கள் அனைத்தும் கொள்ளிடம் ஆற்றில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பழுதடைந்துள்ளது. தலைமை நீரேற்று நிலையத்தில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணற்றில் நீர் ஊற்று அளவு குறைந்துள்ளது. இதனால் நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீரை மக்களுக்கு வினியோகம் செய்யமுடியவில்லை. எனவே உடனடியாக தேவையான எண்ணிக்கையில் ஆழ்குழாய் அமைத்து, மக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். ஆய்வின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர்கள் சக்திவேல், சிவபிரகாசம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் பாரதிதாசன், பெரம்பலூர் நகராட்சி ஆணையர் வினோத், இளநிலை பொறியாளர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story