சூராணம் பகுதியில் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்காமல் 2 ஆண்டுகளாக தவிக்கும் விவசாயிகள்
இளையான்குடி அருகே சூராணம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2 ஆண்டுகளாக பயிர் காப்பீட்டு தொகை கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இளையான்குடி,
சிவகங்கை மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியாக இளையான்குடி ஒன்றியம் உள்ளது. இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளதால், ஏராளமானோர் அதனை நம்பியே உள்ளனர். இந்தநிலையில் இளையான்குடி, சாலைகிராமம், சூராணம், குமாரக்குறிச்சி உள்ளிட்ட இளையான்குடி வட்டாரத்தில் கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் தண்ணீரின்றி விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாகவே இளையான்குடி வட்டார விவசாயிகள் பயிர் காப்பீட்டு தொகை கேட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டம் நடத்தினால் தான் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கும் என்ற நிலை உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் சூராணம் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2016–17–ம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் 500–க்கும் மேற்பட்டோருக்கு காப்பீட்டு தொகை இன்றளவும் வழங்கப்படாத நிலை தொடர்கிறது. இதனால் விவசாயிகள் இன்றளவும் பயிர் காப்பீட்டு தொகை கிடைக்காமல், வாங்கிய கடன் தொகையை வங்கியில் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கலங்காதன்கோட்டையை சேர்ந்த சுல்தான் என்ற விவசாயி கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பருவமழையை நம்பி நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தோம். ஆனால் மழை பொய்த்துவிட்டதால் பயிர் விளைச்சல் கிடைக்கவில்லை. பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேற்கொண்டு பயிர் காப்பீடு செய்திருந்த நிலையில், 2 ஆண்டுகளாகியும் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை. இதனால் வாங்கிய கடன் தொகைக்கு சமமாக வட்டியும் அதிகரித்துவிட்டது. எனவே பயிர் காப்பீட்டு தொகை விரைந்து வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுதொடர்பாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறும்போது, சூராணம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர் கொடுத்த அடங்கலில் ஒரே சர்வே எண்ணை பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற குளறுபடிகளால் பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படாத நிலை உள்ளது. இதற்கு காரணமானவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்ததும் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.