கோர்ட்டு விதித்த தண்டனைக்கு பின்னர் தலைமறைவாக இருந்த கூட்டுறவு சங்க செயலாளர் கைது
சிவகங்கை மாவட்டத்தில் கோர்ட்டு விதித்த தண்டனைக்கு பின்னர் தலைமறைவாக இருந்த கூட்டுறவு சங்க செயலாளர் உதயசூரியனை போலீசார் நேற்று கைது செய்தனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் கடந்த 1993–ம் ஆண்டு செயலாளராக பணியாற்றியவர் உதயசூரியன். இவர் ரூ.13 லட்சம் கையாடல் செய்ததாக சிவகங்கை மாவட்ட வணிகவியல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் உதயசூரியனுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து உதயசூரியன் மேல்முறையீடு செய்தார். அதில் கீழ் கோர்ட்டில் விதித்த தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில் உதயசூரியன் தலைமறைவாகிவிட்டார். இதனால் அவரை பிடிக்க கோர்ட்டில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வணிகவியல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இனஸ்பெக்டர் பாஸ்கரன், சப்–இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் தலைமையிலான போலீசார் உதயசூரியனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.