“சக அரசியல் தலைவருக்கு எதிரான கருத்தை மு.க.ஸ்டாலின் ஆதரித்தது வேதனை அளிக்கிறது” தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


“சக அரசியல் தலைவருக்கு எதிரான கருத்தை மு.க.ஸ்டாலின் ஆதரித்தது வேதனை அளிக்கிறது” தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 4 Sep 2018 11:45 PM GMT (Updated: 4 Sep 2018 7:43 PM GMT)

“சக அரசியல் தலைவருக்கு எதிரான கருத்தை மு.க.ஸ்டாலின் ஆதரித்தது வேதனை அளிக்கிறது” என தமிழிசை சவுந்தரராஜன் மதுரையில் பேட்டி அளித்தார்.

மதுரை,

தூத்துக்குடியில் இருந்து பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை வந்தார். இரவு 9.30 மணியளவில் அவர் சென்னை செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் செல்ல இருந்த விமானம் புறப்பட்டு விட்டது. இதையடுத்து அவர் மதுரையிலேயே தங்கினார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:–

சக அரசியல்வாதிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் பேசி இருப்பது மன வேதனை அளிக்கிறது. விமானத்தில் என்னுடன் பயணம் செய்த பெண் பா.ஜ.க.வை விமர்சித்தது திட்டமிட்ட செயல். விமர்சனம் குறித்து முன் கூட்டியே டுவிட்டரில் அந்த பெண் பதிவு செய்து உள்ளார். சக அரசியல் தலைவருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு ஆதரவாக ஸ்டாலின் பேசி இருப்பது நாகரிகமற்ற செயல்.

கருணாநிதி இருந்திருந்தால் இந்த செயலுக்கு ஆதரவு தெரிவித்து இருக்க மாட்டார். மு.க.ஸ்டாலினுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டால் நான் தான் முதல் ஆதரவு குரல் எழுப்பி இருப்பேன். என் உயிரைப்பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. அப்படி கவலைப்பட்டு இருந்தால் நான் பொது வாழ்வில் ஈடுபட்டு இருக்க முடியாது. போராடி தான் இந்த இடத்திற்கு வந்து உள்ளேன். இந்த பிரச்சினையை நான் தமிழக மக்களிடமே விட்டு விடுகிறேன். காலை 10.20 மணிக்கு புறப்படும் விமானத்தில் 10.22 மணிக்கு அந்த பெண் டுவிட்டர் பதிவு செய்து உள்ளார். அதில் தமிழிசை என்னுடன் விமானத்தில் இருக்கிறார். அவரையும், பா.ஜ.க.வையும் எதிர்த்து பேச போகிறேன். என்னை என்ன செய்து விட முடியும் என பதிவு செய்து உள்ளார். இது குறித்த ஆவணம் என்னிடம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story