மாதாந்திர மருத்துவ படியினை உயர்த்த கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்


மாதாந்திர மருத்துவ படியினை உயர்த்த கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 4 Sep 2018 11:00 PM GMT (Updated: 4 Sep 2018 7:53 PM GMT)

மாதாந்திர மருத்துவ படியை உயர்த்த கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்,

கரூர் மாவட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சடை யாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ஜெயமூர்த்தி வரவேற்று பேசினார். மாவட்ட இணை செயலாளர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார். போராட்டத்தின் போது புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்று கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் ஓய்வூதியருக்கு தான் செய்த செலவில் 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை மட்டுமே கிடைக்கிறது. இதனை மறுபரிசீலனை செய்து, ஓய்வூதியருக்கு சிகிச்சையின் முழு பகுதியும் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.

மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு தர ஊதியத்தின் அடிப்படையில் திருத்திய ஓய்வூதியம் கடந்த 2006-க்கு முன்பு வழங்கியுள்ள நிலையில் தமிழக ஓய்வூதியர்களுக்கும் அதேபோல் வழங்க வேண்டும். மாதாந்திர மருத்துவ படியினை ரூ.1,000-ஆக உயர்த்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1½ லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் ஜோதிபிரகாஷ், மாவட்ட செயலாளர் தங்கவேல் உள்பட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story