பாலியல் புகார் தெரிவித்த மாணவி வகுப்பறைக்கு வந்ததால், பேராசிரியர்கள், மாணவர்கள் வகுப்பை புறக்கணித்தனர்


பாலியல் புகார் தெரிவித்த மாணவி வகுப்பறைக்கு வந்ததால், பேராசிரியர்கள், மாணவர்கள் வகுப்பை புறக்கணித்தனர்
x
தினத்தந்தி 4 Sep 2018 10:45 PM GMT (Updated: 4 Sep 2018 8:22 PM GMT)

பாலியல் புகார் தெரிவித்த மாணவி வகுப்பறைக்கு வந்ததால் பேராசிரியர்கள், மாணவர்கள் வகுப்பை புறக்கணித்தனர். அதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணாபுரம்,

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூரில் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு 2-ம் ஆண்டு படிக்கும் சென்னையை சேர்ந்த மாணவிக்கு அங்கு பணியாற்றிய உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் விடுதி காப்பாளர்களான 2 உதவி பேராசிரியைகள் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி புகார் தெரிவித்திருந்தார். இதனையடுத்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த நிலையில் கோவை வேளாண்மை பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு இயக்குனர் சாந்தி தலைமையிலான குழுவினர் கல்லூரிக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்வுகள் முடிந்து நேற்று வகுப்புகள் தொடங்கியது. வழக்கம்போல் மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வந்தனர். பாலியல் புகார் தெரிவித்த மாணவியும் கல்லூரிக்கு வந்தார்.

அவர் வகுப்பறைக்கு வந்தபோது அங்கு பாடம் நடத்துவதற்காக வந்த பேராசிரியை வகுப்பை புறக்கணித்து வெளியேறினார். இதைப்பார்த்த மற்ற மாணவ, மாணவிகளும் வகுப்பை புறக்கணித்து வெளியேறினர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி மட்டும் வகுப்பறையில் தனியாக அமர்ந்து இருந்தார். இதுகுறித்து மாணவி அவருடைய பெற்றோருக்கு தெரிவித்தார்.

இந்த தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக கல்லூரி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போலீசார் கல்லூரி நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பேராசிரியை மற்றும் மாணவ, மாணவிகள் வகுப்புக்கு சென்றனர்.

அதேபோல் மீண்டும் மதியம் மாணவி வகுப்பறைக்கு செல்லும்போதும் அங்கிருந்த பேராசிரியர் மற்றும் மாணவ, மாணவிகள் வகுப்பை புறக்கணித்து வெளியேறினர். இதையடுத்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி பேராசிரியர், மாணவ- மாணவிகளை வகுப்பறைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை வேளாண்மை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், பாலியல் புகாரில் சிக்கி உள்ள விடுதி காப்பாளர்களான 2 பேராசிரியைகள் மற்றும் 4 கல்லூரி மாணவிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு விசாரணைக்காக வந்தனர். அவர்களிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் மாணவி அளித்த பாலியல் புகார் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த விசாரணை 2 மணி நேரத்திற்கு மேல் நடந்தது. விசாரணை முடித்து வெளியே வந்த கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியைகளிடம் பேட்டி எடுக்க நிருபர்கள் காத்திருந்தனர். அவர்களை கண்டதும் கல்லூரி முதல்வரும், பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் காரில் ஏறி மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டனர்.


Next Story