திருவொற்றியூரில் வீடுகளின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு + "||" + In Thiruvotriyur Had been in front of homes Fire Deposit for Motorcycles
திருவொற்றியூரில் வீடுகளின் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு
திருவொற்றியூரில் அடுத்தடுத்து 3 இடங்களில் வீடுகளின் முன் நிறுத்தி இருந்த 5 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் மேற்கு பகுதியான சக்தி கணபதி நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் சங்கர் கணேஷ் (வயது 38). தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அருள்மொழி. நேற்று முன்தினம் இரவு அனைவரும் வழக்கம் போல வீட்டை பூட்டி விட்டு தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மோட்டார் சைக்கிள்கள் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்து சங்கர் கணேஷ் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் தீ வேகமாக எரிந்ததால் அவரால் வீட்டை வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை.
அவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் மோட்டார் சைக்கிள்களில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர், ஆனால் 3 மோட்டார்சைக்கிள்களும் தீயில் எரிந்து எலும்புக்கூடானது. நல்லவேளையாக தீ வீட்டுக்குள் பரவாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் நடந்த சற்று நேரத்தில் அருகில் உள்ள சண்முகபுரம் பகுதியில் உள்ள கட்டிட காண்டிராக்டர் கணேசன்(35) என்பவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.
இதேபோல் அருகே உள்ள கலைவாணர் நகரிலும் ஒரு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து மேற்கண்ட வீட்டின் உரிமையாளர்கள் சாந்தாங்காடு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
அடுத்தடுத்த 3 இடங்களில் 5 மோட்டார் சைக்கிள்கள் மர்மமான முறையில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.