டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்கு


டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 5 Sept 2018 3:45 AM IST (Updated: 5 Sept 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள சித்திரையூரில் அரசு டாஸ்மாக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையினால் பெண்கள், மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மது குடித்து விட்டு காலி பாட்டில்களை வயல்களிலும், வாய்க்கால்களிலும் வீசி விட்டு செல்கின்றனர். இதனால் விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் குன்னியூர் கடைவீதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட குன்னியூரை சேர்ந்த மணிகண்டன், மாதவன், விஜயகுமார், குருமூர்த்தி, சண்முகம், சரவணகுமார் மற்றும் பெண்கள் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story