வேடசந்தூர் அருகே, நிலத்தகராறில் கத்தியால் குத்தி தொழிலாளி கொலை உறவினருக்கு போலீஸ் வலைவீச்சு
வேடசந்தூர் அருகே நிலத்தகராறு காரணமாக கத்தியால் குத்தி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே நிலத்தகராறு காரணமாக கத்தியால் குத்தி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லை அடுத்த எரியோடு அருகே உள்ள ஒத்தக்கடை இந்திராநகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 32). இவருடைய மனைவி புஷ்பா. செல்வராஜ், தனியார் நூற்புமில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டி (34). இருவரும் உறவினர்கள் ஆவர். இருவருக்கும் இடையே வீட்டின் அருகே உள்ள பொது நிலத்தை பயன்படுத்துவது தொடர்பாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலையில் செல்வராஜிடம், துரைப்பாண்டி மீண்டும் தகராறு செய்துள்ளார். இதையடுத்து அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்தநிலையில் நள்ளிரவு வேளையில் செல்வராஜின் வீட்டுக்கு, துரைப்பாண்டி வந்துள்ளார். வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்ததால், கதவை தட்டி சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் வெளியே வந்து, துரைப்பாண்டியை கண்டித்துள்ளார்.
அப்போது, துரைப்பாண்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வராஜை குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த அவர் அலறித்துடித்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டு இருந்த புஷ்பா ஓடி வந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் எரியோடு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கவியரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் கொலை செய்துவிட்டு தப்பியோடிய துரைப்பாண்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தால் எரியோடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. துரைப்பாண்டி மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.