மாவட்ட செய்திகள்

கடலூர் அருகே விபத்து: டிப்பர் லாரி மோதி கணவன், மனைவி பலி + "||" + Accident near Cuddalore: Dipper lorry murdered husband and wife

கடலூர் அருகே விபத்து: டிப்பர் லாரி மோதி கணவன், மனைவி பலி

கடலூர் அருகே விபத்து: டிப்பர் லாரி மோதி கணவன், மனைவி பலி
கடலூர் அருகே டிப்பர் லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி பலியானார்கள். துக்க நிகழ்ச்சிக்கு வந்து திரும்பிய போது நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் முதுநகர், 


புதுச்சேரி சேதுராப்பட்டு மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் செந்தில்குமார் (வயது 32). இவர் அதே பகுதியில் தையல்கடை வைத்துள்ளார். இவருக்கும் கடலூர் அருகே பி.வடுகப்பாளையத்தை சேர்ந்த சசிரேகா (27) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் லோகஸ்ரீ என்கிற மகள் உள்ளார்.

இந்நிலையில் பி.வடுகப்பாளையத்தில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக நேற்று செந்தில்குமார், சசிரேகா ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் துக்க நிகழ்ச்சியை முடித்து விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அவர்கள் வண்டிப்பாளையம் அரசு பள்ளிக்கூடம் அருகே வந்த போது, பின்னால் வந்த டிப்பர் லாரி அவர்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் ரோட்டோரம் தூக்கி வீசப்பட்ட அவர்கள் ரத்தக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் நேர்ந்த இந்த விபத்தில் கணவன், மனைவி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.