ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த வேலைக்காரர் கைது


ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த வேலைக்காரர் கைது
x
தினத்தந்தி 5 Sept 2018 4:28 AM IST (Updated: 5 Sept 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

உரிமையாளர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த வேலைக்கார வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை சுன்னாப்பட்டியில் உள்ள விருந்தாவன் குடியிருப்பில் 4-வது மாடியில் வசித்து வருபவர் சஞ்சய் வினய் (வயது62). இவர் கடந்த மாதம் குடும்பத்தினருடன் மகாபலேஷ்வருக்கு சுற்றுலா சென்று இருந்தார்.

இந்தநிலையில் அவர் 5 நாட்கள் கழித்து திரும்பி வந்த போது வீட்டில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சஞ்சய் வினய், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சம்பவம் நடந்த நாள் முதல் சஞ்சய் வினய் வீட்டில் வேலை பார்த்து வந்த ராஜேந்திர தர்மதேவ் (26) என்பவர் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பீகாரில் பதுங்கி இருந்த அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சஞ்சய் வினயின் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

உரிமையாளர் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று இருந்த நேரத்தில் ராஜேந்திர தர்மதேவ் குளியல் அறை ஜன்னல் வழியாக அவரது வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் அவர் பீரோவில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதையடுத்து போலீசார் வேலைக்காரர் ராஜேந்திர தர்மதேவை கைது செய்தனர். 

Next Story