மாவட்ட செய்திகள்

தாதரில் இருந்து திருநெல்வேலி செல்லும் அதிவிரைவு ரெயிலின் முன்பதிவு நிறுத்தம் ஏன்? + "||" + From Dadar to Tirunelveli Why high-speed rail stop the booking?

தாதரில் இருந்து திருநெல்வேலி செல்லும் அதிவிரைவு ரெயிலின் முன்பதிவு நிறுத்தம் ஏன்?

தாதரில் இருந்து திருநெல்வேலி செல்லும் அதிவிரைவு ரெயிலின் முன்பதிவு நிறுத்தம் ஏன்?
தாதரில் இருந்து திருநெல்வேலி செல்லும் அதிவிரைவு ரெயிலின் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ரெயில்வே விளக்கம் அளித்து உள்ளது.
மும்பை,

மும்பை தாதரில் இருந்து திருநெல்வேலிக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 8.40 மணிக்கு அதிவிரைவு ரெயில் (வண்டி எண் 22629) கொங்கன் வழித்தடம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டிசம்பர் 7-ந் தேதி மற்றும் அதற்கு பின் வரும் நாட்களுக்கான இந்த ரெயிலின் டிக்கெட் முன்பதிவு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.


இதன் காரணமாக அந்த ரெயிலில் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்த தமிழ் பயணிகள் டிக்கெட் எடுக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.மேலும் அந்த ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு விட்டதோ என்ற அச்சமும் பயணிகள் மத்தியில் எழுந்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘தாதரில் இருந்து திருநெல்வேலி செல்லும் வாராந்திர அதிவிரைவு ரெயில் புறப்படும் நாளை வெள்ளிக்கிழமையில் இருந்து வேறு கிழமைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான புதிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அதன்பின்னர் அந்த ரெயிலின் முன்பதிவு அனுமதிக்கப்படும். மற்றபடி அந்த ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படும் வதந்தியை பயணிகள் நம்ப வேண்டாம்’ என்றனர்.

இதற்கிடையே, இந்த அதிவிரைவு ரெயிலை திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக இயக்க வேண்டும் என ரெயில்வே மந்திரியிடம் மும்பை தமிழின ரெயில் பயணிகள் நலச்சங்க தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் அப்பாதுரை உள்ளிட்டோர் மனு கொடுத்து உள்ளனர்.