மனைவியை கொலை செய்துவிட்டு எண்ணெய் ஆலை உரிமையாளர் தற்கொலை


மனைவியை கொலை செய்துவிட்டு எண்ணெய் ஆலை உரிமையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 5 Sept 2018 3:30 AM IST (Updated: 5 Sept 2018 6:13 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையத்தில் மகளின் நகை மாயமானதால் ஏற்பட்ட தகராறில், மனைவியை கொலை செய்து விட்டு எண்ணெய் ஆலை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

உத்தமபாளையம்,


தேனி மாவட்டம் உத்தமபாளையம் 17-வது வார்டு களிமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 70). எண்ணெய் ஆலை உரிமையாளர். அவருடைய மனைவி சாரம்மாள் (60). இந்த தம்பதிக்கு முகமது ராஜா (38) என்ற மகனும், தாஜிதா பர்வீன் (36) என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.

முகமது ராஜா கம்பத்திலும், தாஜிதா பர்வீன் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பேரையூரிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அப்பாஸ், சாரம்மாள் ஆகியோர் உத்தமபாளையத்தில் தனியாக வசித்து வந்தனர். கடந்த 2-ந்தேதியன்று தாஜிதா பர்வீனின் உறவினர் திருமணம் உத்தமபாளையத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தாஜிதா பர்வீன் உத்தமபாளையத்துக்கு வந்தார்.

அப்போது அவர், நகைகளை கொண்டு வந்திருந்தார். அந்த நகைகளை தனது பெற்றோர் வீட்டில் வைத்திருந்தார். அப்போது, பையில் வைத்திருந்த 19 பவுன் நகை மாயமானது. இது தொடர்பாக அப்பாஸ்-சாரம்மாள் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. அதன்படி நேற்று அதிகாலையிலும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த அப்பாஸ், தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். பின்னர் அவர் மனைவியை கொன்றுவிட்ட விரக்தியில், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில் தனது தந்தையின் செல்போனுக்கு முகமதுராஜா தொடர்பு கொண்டார். ஆனால் அப்பாஸ் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டுக்கு வந்தார். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டு கதவை உடைத்து முகமது ராஜா உள்ளே சென்றார். அங்கு கழுத்து பகுதியில் வெட்டப்பட்ட நிலையில் சாரம்மாள் இறந்து கிடந்தார். தூக்கில் தொங்கியபடி அப்பாஸ் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி, இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் 2 பேரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தமபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story