பழைய சொகுசு கார்களுக்கு அமோக வரவேற்பு


பழைய சொகுசு கார்களுக்கு அமோக வரவேற்பு
x

புதிய சொகுசுக் கார்களின் விற்பனையை விட உபயோகப்படுத்தப்பட்ட செகன்ட்ஹேண்ட்’ சொகுசு கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் செகன்ட் ஹேண்ட் சொகுசு கார்களின் விற்பனை 2 மடங்கு அதிகரித்துள்ளதாம்.

கடந்த ஆண்டில், புதிய ரக சொகுசு கார்களின் விற்பனை 12 சதவீதத்தில் முடங்கிவிட, செகன்ட் ஹேண்ட் சொகுசு கார்களின் விற்பனை 22 சதவீதத்தை தாண்டியிருக்கிறது. ஏனெனில் புதிய கார் வாங்கும் விலைக்கும், அதைவிட மதிப்பில் உயர்ந்த பழைய கார்களை வாங்கிவிடலாம் என்பது பெரும்பாலானோரின் மனநிலையாக உள்ளது. அதனால்தான், பழைய சொகுசு கார்களின் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

தங்களது பட்ஜெட்டிற்குள் சொகுசு கார் கிடைப்பதால் பெரும்பாலானோர் மெர்சிடஸ் பென்ஸ், ஆடி போன்ற ஆடம்பர சொகுசு கார்களை ஓட்டிச் செல்கிறார்கள். அதிலும் குறிப்பாக மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்கள், செகன்ட் ஹேண்ட் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பட்ஜெட் விலை, குறைந்த பராமரிப்பு செலவு போன்ற காரணங்களினால், பென்ஸ் கார்கள் பெரும்பாலான மக்களின் தேர்வாக அமைந்திருக்கிறது என அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரோலண்ட் போல்கர் தெரிவித்துள்ளார். இவர் சொல்வதை போன்றே இதுவரை 12 ஆயிரம் செகன்ட்ஹேண்ட் கார்களை மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனமே விற்பனை செய்துள்ளது.

பொதுவாக இத்தகைய சொகுசு கார்களின் விலை ரூ. 15 லட்சத்திலிருந்து தொடங்குவதால், புதிய செடான் கார்களுக்கு பதிலாக பயன்படுத்தப்பட்ட பென்ஸ் கார்களை வாங்கி செல்கிறார்களாம்.

இதுபோன்ற உபயோகப்படுத்தப்பட்ட சொகுசு கார்கள் பஞ்சாப், ஜெய்ப்பூர், சண்டீகர், பெங்களூரு, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிகம் விற்பனையாவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் தற்போது செகன்ட் ஹேண்ட் கார் சந்தை வளர்ச்சியடைந்து வருகிறது. உலகளவில் ஒரு புதிய கார் விற்பனையாகும் அதே வேளையில் 3 செகன்ட் ஹேண்ட் கார்கள் விற்பனையாவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவை பொருத்தமட்டில் ஒரு புதிய கார் விற்பனையாகும் நேரத்தில் 2 பழைய சொகுசு கார்கள் விற்பனையாகிறதாம். அதனால்தான் இந்தியாவில் செகன்ட் ஹேண்ட் விற்பனை சந்தை விரைவான வளர்ச்சியை எட்டி வருகிறது. மேலும் சொகுசு கார்களைத் தயாரிக்கும் நிறுவனங்களே செகன்ட் ஹேண்ட் கார்களை உத்தரவாதத்துடன் விற்பனை செய்ய முன்வந்துள்ளது மிகப் பெரிய மாற்றமே.

Next Story