ராயல் என்பீல்டு ‘சிக்னல்’ அறிமுகம்
இந்திய ராணுவத்திற்கும் ராயல் என்பீல்டுக்குமான பந்தம் மிக நீண்ட நெடுங்காலமானது.
ஏறக்குறைய 65 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் பிரிக்க முடியாத அங்கமாகவே இருந்து வருகிறது. இதை பொதுமக்களும் உணரும் வகையில் ‘கிளாசிக் சிக்னல் 350’ மாடல் மோட்டார் சைக்கிளை இந்நிறுவனம் கடந்த வாரம் அறிமுகம் செய்தது.
1952-ம் ஆண்டிலிருந்து இந்திய ராணுவத்தில் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதை சிறப்பிக்கும் வகையில் ‘கிளாசிக் சிக்னல் 350’ மோட்டார் சைக்கிள்கள் குறைந்த எண்ணிக்கையில் (ஸ்பெஷல் எடிஷன்) தயாரிக்கப்பட்டு விற்கப்பட உள்ளன.
சென்னையில் இதன் விற்பனையக விலை ரூ. 1.62 லட்சமாகும். கிளாசிக் மோட்டார் சைக்கிளை விட இது ரூ. 15 ஆயிரம் விலை அதிகமாகும்.
வழக்கமான கிளாசிக் மோட்டார் சைக்கிளை போன்றே காட்சியளித்தாலும், இது கிளாசிக் மாடலின் விலையை விட அதிகமாகும். ஆம், சிக்னல் மாடலின் விலை, கிளாசிக் மாடலை விட 15 ஆயிரம் கூடுதலாகும். பெரியளவில் மாற்றங்கள் இல்லை என்றாலும், சிறுசிறு மாற்றங்களை செய்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த மாடலில் ஒவ்வொரு மோட்டார் சைக்கிளுக்கும் பிரத்யேக சீரியல் எண் அதன் பெட் ரோல் டேங்க் மீது எழுதப்பட்டிருக்கும். என்ஜின், சக்கர ரிம், சைலென்ஸர் உள்ளிட்ட அனைத்து பாகங்களும் கருப்பு வண்ணத்தில் இருக்கும். முகப்பு விளக்கின் சுற்றுப் பகுதி கறுப்பு பட்டையைக் கொண்டிருக்கும். ஏர்போர்ன் புளூ (நீல நிறம்) மற்றும் ஸ்டோர்ம்ரைடர் சாண்ட் (புழுதி மணல் நிறம்) ஆகிய இரண்டு வண்ணங் களில் இவை வெளியிடப்பட்டுள்ளன.
என்ஜினிலும் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை. கிளாசிக் 350 சி.சி. மோட்டார் சைக்கிளில் உள்ளதைப் போன்றே இதிலும் 346 சி.சி. ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 19 பி.ஹெச்.பி. திறனையும் 28 நியூட்டன் மீட்டர் டார்க் சக்தியையும் வெளிப்படுத்தக் கூடியது. இதிலும் 5 கியர்கள் உள்ளன. என்ஜினின் செயல் திறனில் மாற்றங்கள் செய்யப்படாததால் கிளாசிக் மோட்டார் சைக்கிளின் செயல்திறனைப் போன்றே இதுவும் இருக்கும்.
ஆனால் இந்த மோட்டார் சைக்கிளில் முதல் முறையாக ஏ.பி.எஸ். (ஆன்டி பிரேக்கிங் சிஸ்டம்) இடம்பெற்றுள்ளது. அதேபோல முன்புறம் மற்றும் பின்புறங்களில் ‘டிஸ்க் பிரேக்’ இருப்பது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறது.
சிக்னல் வாகனத்துடன் தனித்துவம் மிக்க 40 உதிரி பாகங்களையும் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பேனியர், ஸ்டீல் என்ஜின் கார்டு, டூரிங் சீட், 3-டி மெஷ், வின்ட்ஷீல்ட் கிட், அலுமினிய சக்கரம் உள்ளிட்ட பல உதிரி பாகங்கள் இதில் அடங்கும்.
Related Tags :
Next Story