பயணிகள் வசதிக்காக மேலும் 17 புதிய அரசு பஸ்கள் தயார் நாகர்கோவில் மண்டலத்தில் விரைவில் இயக்கப்படுகிறது


பயணிகள் வசதிக்காக மேலும் 17 புதிய அரசு பஸ்கள் தயார் நாகர்கோவில் மண்டலத்தில் விரைவில் இயக்கப்படுகிறது
x
தினத்தந்தி 5 Sep 2018 10:45 PM GMT (Updated: 5 Sep 2018 6:37 PM GMT)

நாகர்கோவில் மண்டலத்தில் பயணிகள் வசதிக்காக மேலும் 17 புதிய அரசு பஸ்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த பஸ்கள் அனைத்தையும் விரைவில் இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நாகர்கோவில் மண்டலத்துக்கு பயணிகள் வசதிக்காக இந்த ஆண்டு 52 புதிய பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 35 புதிய பஸ்களுக்கு நவீன முறையில் கூண்டு அமைக்கும் பணி நிறைவடைந்து நாகர்கோவில்–திருநெல்வேலி என்ட் டூ என்ட் பஸ்களாகவும், திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நவீன முறையில் கூண்டு அமைக்கப்பட்ட பஸ்களில் வழக்கமான பஸ்களை விட 5 இருக்கைகள் குறைவு. இதனால் இந்த பஸ்களில் ஒரு இருக்கைக்கும், மற்றொரு இருக்கைக்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருப்பதால், பயணிகள் கால்களை நீட்டி அமர வசதியாக இருக்கும். மேலும் பஸ்சில் ஜி.பி.எஸ். கருவி, வேக கட்டுப்பாட்டு கருவி, கேமராக்கள், டிஜிட்டல் ஊர் பெயர் பலகை, அவசர கால வழி, தானியங்கி கதவுகள், அறிவிப்பு செய்வதற்கான மைக் சிஸ்டம், டிரைவர் குடிபோதையில் இருந்தால் அதை கண்டறியும் கருவி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் நாகர்கோவில்–திருநெல்வேலி என்ட் டூ என்ட் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்களில் கண்டக்டர் இல்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன. நாகர்கோவில் மற்றும் நெல்லையில் பயணிகள் பயண டிக்கெட் எடுக்க வசதியாக தனி கவுண்ட்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. சிலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது கண்டறியப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் சோதனை முறையில் நாகர்கோவில் மற்றும் நெல்லையில் கண்டக்டர்கள் பஸ்களுக்கு வந்து டிக்கெட் கொடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். பஸ்சில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் கொடுத்து முடிந்ததும் கண்டக்டர்கள் பஸ்சை விட்டு இறங்கி கொள்வார்கள். அதன் பிறகு பஸ் கண்டக்டர் இல்லாமல் புறப்பட்டு செல்லும்.

தேவைப்படும் பட்சத்தில் நாகர்கோவில்–நெல்லையில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களும் பயன்படுத்தப்படும் என்று அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மொத்தம் உள்ள 52 பஸ்களில் 35 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 17 புதிய பஸ்களுக்கு நவீன முறையில் கூண்டு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து 17 புதிய பஸ்களும் நேற்று நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலக வளாகத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளன.

விரைவில் அந்த பஸ்களை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய பஸ்களை தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story