மாவட்ட செய்திகள்

வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை பெரிய தேர்பவனி பக்தர்கள் குவிகிறார்கள் + "||" + The great devarvani devotees accumulate tomorrow in Velankanni

வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை பெரிய தேர்பவனி பக்தர்கள் குவிகிறார்கள்

வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை பெரிய தேர்பவனி பக்தர்கள் குவிகிறார்கள்
வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பெரிய தேர்பவனி நடக்கிறது. இதனையொட்டி வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் வேளாங்கண்ணி திகழ்கிறது. கீழை நாடுகளில் “லூர்து நகர்“ என்ற பெருமையுடன் அன்னை மரியாவின் புகழ் பரப்பும் புண்ணிய தலமாகவும் வேளாங்கண்ணி விளங்குகிறது.


வேளாங்கண்ணி பேராலயத்தில், மாதாவின் பிறந்தநாள் 11 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பேராலய திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருகின்றனர்.

தொடர்ந்து விழா நாட்களில் சிறப்பு திருப்பலிகள் மற்றும் சிறிய தேர்பவனிகள் நடைபெறும். மேலும் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக விழா நாட்களில் தினந்தோறும் ஆலய கொடிமரத்தில் திருக்கொடியேற்றப்படும். அதன்படி நேற்று கொடியேற்றும் நிகழ்ச்சி பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று வேளாங்கண்ணியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் குடைபிடித்தபடி பக்தர்கள் கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர். மேலும் தென்னை மரக்கன்றுகளை கொண்டு வந்து காணிக்கையாக செலுத்தினர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய திருத்தேர்பவனி நாளை(வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் நடக்கிறது. இந்த தேர் பவனியை காண்பதற்காக சென்னை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுச்சேரி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாதா செரூபம் வைத்து அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்துகொண்டு பாதையாத்திரையாக வேளாங் கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

நாளை மறுநாள்(சனிக்கிழமை) அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பேராலய கீழ்க்கோவிலில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப் படுகிறது.