வேளச்சேரி அருகே தண்டவாளத்தில் மீண்டும் சிமெண்டு பலகை வைத்த மர்ம ஆசாமிகள் ரெயிலை கவிழ்க்க சதியா?
வேளச்சேரி அருகே தண்டவாளத்தில் மீண்டும் சிமெண்டு பலகை வைக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது, ரெயிலை கவிழ்ப்பதற்காக மர்ம நபர்கள் மேற்கொண்ட சதியா? என்று விசாரணை நடந்து வருகிறது.
ஆலந்தூர்,
சென்னை வேளச்சேரி பறக்கும் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 30–ந் தேதி பெருங்குடி நோக்கி மின்சார ரெயில் ஒன்று புறப்பட்டது. ரெயில் கிளம்பிய சிறிது நேரத்தில் தண்டவாளத்தில் பயங்கர சத்தம் கேட்டது. உடனே டிரைவர் கீழே இறங்கி பார்த்தார்.
அப்போது தண்டவாளத்தில் சிமெண்டு பலகை வைக்கப்பட்டு இருந்ததும், அதில் ரெயில் ஏறியதும் தெரியவந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் சிலர் தண்டவாளத்தில் சிமெண்டு பலகையை வைத்துவிட்டு சென்றிருந்தனர். ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து திருவான்மியூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தமிழக ரெயில்வே போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் நேற்று முன்தினம் நேரில் வந்து வேளச்சேரி ரெயில் நிலையத்தில் இருந்து பெருங்குடி செல்லும் தண்டவாளத்தை ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் 2–வது முறையாக மீண்டும் நேற்று முன்தினம் இரவில் யாரோ மர்ம ஆசாமிகள், அந்த பகுதியில் சிமெண்டு பலகையை வைத்துவிட்டு சென்றுள்ளனர். இந்த பலகை மீது மின்சார ரெயில் ஏறியதால் பலத்த சத்தத்துடன் உடைந்தது. இதிலும் அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை.
இதுபற்றி வேளச்சேரி ரெயில்வே அதிகாரிகளிடம் மின்சார ரெயில் டிரைவர் புகார் செய்தார். அதன்பேரில் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சார ரெயிலை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கில் யாராவது சிமெண்டு பலகைகளை தண்டவாளத்தில் வைக்கிறார்களா? என்று விசாரணை நடத்தி வரும் போலீசார், இரவு நேரங்களில் அந்த பகுதிகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
வேளச்சேரி அருகே ரெயில் தண்டவாளத்தில் மீண்டும் சிமெண்டு பலகைகள் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.