மாவட்ட செய்திகள்

குண்டும், குழியுமாக மாறிய சாலைகள் ஓராண்டாக செயல்படாத புழுதிவாக்கம் பஸ் நிலையம் + "||" + Roads changed Dysfunctional bus stand bus station

குண்டும், குழியுமாக மாறிய சாலைகள் ஓராண்டாக செயல்படாத புழுதிவாக்கம் பஸ் நிலையம்

குண்டும், குழியுமாக மாறிய சாலைகள் ஓராண்டாக செயல்படாத புழுதிவாக்கம் பஸ் நிலையம்
சாலைகள் குண்டும் குழியுமாக மாறியதால் ஓராண்டாக செயல்படாமல் இருக்கும் புழுதிவாக்கம் பஸ் நிலையத்தை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த புழுதிவாக்கத்தில் 9 கிரவுண்ட் நிலத்தில் பேரறிஞர் அண்ணா பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து சென்னை பாரிமுனை, கோயம்பேடு, தியாகராயநகர், ஸ்ரீபெரும்புதூர், சோழிங்கநல்லூர், தாம்பரம் போன்ற பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது. கடந்த 2008–ம் ஆண்டு இந்த பஸ் நிலையம் ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக புழுதிவாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளுக்காக சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டதால் இந்த பஸ் நிலையத்துக்கு மாநகர பஸ்கள் வருவது குறைந்தன. மாநகர பஸ்கள் புழுதிவாக்கம் பஸ் நிலையத்திற்கு வருவதற்கு பதிலாக அருகில் உள்ள உள்வட்ட சாலை அருகே வந்து சென்றன.

இதற்கிடையில் புழுதிவாக்கம் பஸ் நிலையத்தில் சென்னை பெருநகர மெட்ரோ குடிநீர் வாரியத்தின் சார்பில் மேல்நிலை குடிநீர் தொட்டியும், கீழ்நிலை தொட்டியும் அமைக்கப்பட்டன.

இதையடுத்து உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதிகளுக்கு லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்ய இங்குள்ள குடிநீர் தொட்டிகள் பயன்படுத்தப்படுவதால் தினமும் 50–க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் இங்கு வந்து செல்கின்றன. இதனால் பஸ் நிலையத்தின் சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டது. மேலும் அந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் இந்த பஸ் நிறுத்தத்திற்கு வந்து சென்ற ஒரு சில மாநகர பஸ்களும் கடந்த ஓராண்டாக முழுவதும் நிறுத்தப்பட்டு விட்டன. பஸ்கள் வருவது நின்றுவிட்டதால் அப்பகுதியினர் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.

20 ஆண்டுகளாக உள்ள பஸ் நிலையத்தின் சாலைகள் உடனடியாக சீரமைக்கவும், சென்னையின் பல்வேறு நகரங்களுக்கு செல்லும் வகையில் பஸ்களை இயக்கவும், பஸ் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தனி பாதைகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.