குடிநீர் குழாயில் உடைப்பு கழிவுநீருடன் கலந்து சாலையில் ஆறாக ஓடும் தண்ணீர்
ஆவடியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீருடன் தண்ணீர் கலந்து சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆவடி,
ஆவடி நகராட்சிக்குட்பட்ட நேரு பஜார் பகுதியில் ஆவடி போலீஸ் நிலையம் எதிரே குடிநீர் குழாய் உள்ளது. இதன் மூலமாக ஆவடியில் உள்ள பல பகுதிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை இந்த குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து வெளியேறிய குடிநீர், கழிவுநீருடன் கலந்து சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
மேலும் வாகனத்தில் செல்லும் போதும் சாலையில் ஓடும் கழிவுநீர் நடந்து செல்லும் மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மீது தெறிக்கிறது. அத்துடன் சாலையில் சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்யமுடியாமல் அவதிப்படுகின்றனர்.
குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் வெளியேறும் குடிநீர் கழிவுநீருடன் கலந்து ஓடுவதால் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் ஆவடி நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
எனினும் குழாயை சீரமைக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் ஆறாக ஓடியது. அப்போது உடைந்த குழாயை முறையாக சரி செய்யாமல், மண்ணை கொட்டி மூடி விட்டு சென்றனர்.
தற்போது அதே இடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வீணாக சாலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆவடி நகராட்சி அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட்டு குடிநீர் குழாயை சரிசெய்து சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.