ஈரோட்டில் இரவில் தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு


ஈரோட்டில் இரவில் தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
x
தினத்தந்தி 6 Sept 2018 3:15 AM IST (Updated: 6 Sept 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில், இரவில் தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில்வீதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவர் ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் மளிகை பொருட்கள் மொத்த வியாபாரமும் செய்து வருகிறார். ஈரோடு கொங்கலம்மன் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவராகவும் உள்ளார்.

இவருடைய வீட்டின் கீழ் தளத்தில் உள்ள 4 குடியிருப்புகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளன. முதல் தளத்தில் செல்வம் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு செல்வம், அவருடைய மனைவி, மகன், மகள் ஆகியோர் மளிகைக்கடைக்கு சென்றிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணிஅளவில் முனியப்பன் கோவில் வீதிக்கு வந்த மர்மநபர்கள் திடீரென 2 பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளனர். அது செல்வம் வீட்டின் முதல் தளத்தில் உள்ள பால்கனியில் விழுந்து வெடித்தது. ஆனால் அங்கு எந்த பொருட்களும் இல்லாததால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. அதன்பின்னர் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். தீ எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக செல்வத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார்? அவர்கள் எதற்காக பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்? தொழில் போட்டி காரணமாக சம்பவம் நடந்ததா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், பெட்ரோல் குண்டு வீசியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஈரோட்டில் தொழில் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story