கழிவுநீர் தேங்கிநின்ற பள்ளத்தில் தவறி விழுந்து போலீஸ்காரரின் மகள் பலி


கழிவுநீர் தேங்கிநின்ற பள்ளத்தில் தவறி விழுந்து போலீஸ்காரரின் மகள் பலி
x
தினத்தந்தி 6 Sept 2018 3:30 AM IST (Updated: 6 Sept 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே கழிவுநீர் தேங்கிநின்ற பள்ளத்தில் தவறி விழுந்து போலீஸ்காரரின் 2-வயது மகள் பரிதாபமாக உயிரிழந்தாள்.

செஞ்சி, 


செஞ்சி தாலுகா அனந்தபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் தீனதயாளன்(வயது 32). இவர் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 2 வயதில் சகிந்தினா என பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை தீனதயாளன் பணிக்கு புறப்பட்டு சென்றார். வீட்டில் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இருந்தனர். மதியம் 3 மணியளவில் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சகிந்தனா திடீரென மாயமானாள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் சகிந்தினாவை தேடினார்கள்.

அப்போது அருகில் கழிவுநீர் தேங்கிநின்ற பள்ளத்தில் தவறி விழுந்த சகிந்தினா உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து உடனே அவளை மீட்டு சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சகிந்தினா பரிதாபமாக உயிரிழந்தார்.

குழந்தையின் உடலை பார்த்து போலீஸ்காரர் தீனதயான், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இது குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story