மாற்றுத்திறனாளி மாணவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் வழங்க மறுப்பதாக வழக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மாற்றுத்திறனாளி மாணவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் வழங்க மறுப்பதாக வழக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Sep 2018 10:15 PM GMT (Updated: 5 Sep 2018 8:33 PM GMT)

பார்வை குறைபாட்டை காரணம் காட்டி மாற்றுத்திறனாளி மாணவருக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் வழங்க மறுப்பதாக தொடரப்பட்ட வழக்கு குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

நெல்லை மாவட்டம் தென்காசி மேலகரத்தை சேர்ந்த மாணவர் விபின் சார்பில் அவருடைய தந்தை ஜபகர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

எனது மகன் 75 சதவீதம் பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி. மருத்துவம் படிக்க வேண்டும் என்பது அவனுடைய கனவு. பிளஸ்–2 பொதுத்தேர்வில் 1,016 மதிப்பெண்களும், நீட் தேர்வில் 720–க்கு 220 மதிப்பெண்களும் எடுத்துள்ளான். மாற்றுத்திறனாளிகள் இட ஒதுக்கீட்டின்படி அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு தரவரிசை பட்டியலில் 285–வது இடம் பிடித்தான்.

ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்று புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது. அதன்பிறகு மாற்றுத்திறனாளி சான்றிதழை உறுதிப்படுத்த சென்னை மருத்துவக்கல்லூரியில் எனது மகனுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவனுக்கு 90 சதவீத பார்வை குறைபாடு இருப்பதாக சான்றிதழ் அளித்துள்ளனர்.

எனது மகனுக்கு 75 சதவீதம்தான் பார்வை குறைபாடு உள்ளது. இந்நிலையில் சென்னை மருத்துவக்கல்லூரி அளித்த சான்றிதழை காரணம் காட்டி புதுக்கோட்டை மருத்துவகல்லூரியில் எனது மகனுக்கு இடம் அளிக்க அனுமதி மறுத்துவிட்டனர்.

அதேநேரத்தில் மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016–ன்படி 40 சதவீதத்துக்கு மேல் பார்வை குறைபாடு இருந்தால் 5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க சட்டத்தில் இடம் உள்ளது. இதை சுப்ரீம் கோர்ட்டும் உறுதிபடுத்தி உள்ளது. எனவே எனது மகனை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிக்க அனுமதி வழங்கவும், மாற்றுத்திறனாளிகள் சட்டத்தின்படி மருத்துவக்கல்லூரி சேர்க்கைக்கு உத்தரவிடவும் வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “மருத்துவக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் சமீபத்தில் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. எனவே இந்த வழக்கில் விரைவில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்“ என்று வாதாடினார்.

முடிவில், “இந்த வழக்கு குறித்து தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று அரசு வக்கீல் தெரிவிக்க வேண்டும். வருகிற 11–ந்தேதி இந்த வழக்கின் தீர்ப்பு பிறப்பிக்கப்படும்“ என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story