குமரி கடற்கரை கிராமங்களில் சுனாமி பேரிடர் ஒத்திகை தத்ரூபமாக நடந்ததால் பரபரப்பு


குமரி கடற்கரை கிராமங்களில் சுனாமி பேரிடர் ஒத்திகை தத்ரூபமாக நடந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Sept 2018 4:15 AM IST (Updated: 6 Sept 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

குமரி கடற்கரை கிராமங்களில் சுனாமி பேரிடர் ஒத்திகை தத்ரூபமாக நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குளச்சல்,

கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி பேரலை தமிழகத்தின் பெரும்பாலான கடற்கரை கிராமங்களை தாக்கி கோர தாண்டவமாடியது. இதில் குமரி மாவட்டம் பெருமளவில் பாதிக்கப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான மக்களின் உயிரையும் பறித்தது. இதில் கொட்டில்பாடு மீனவ கிராமத்தில் 199 பேரும், குளச்சலில் 450-க்கும் மேற்பட்டவர்களும் பலியானார்கள்.

இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்தால் அதில் இருந்து பொதுமக்கள் தப்பிப்பது எப்படி? என்பது பற்றி தேசிய பேரிடர் அமைப்பு மக்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. மேலும் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு ஒத்திகை நிகழ்ச்சிகளையும் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி நேற்று குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரம் மற்றும் குளச்சலை அடுத்த கொட்டில்பாடு கடற்கரை கிராமங்களில் நடந்தது.

மத்திய அரசு நிறுவனமான இன்காய்ஸ் நிறுவனம் சார்பில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக குளச்சல், தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் கல்குளம் தாசில்தார் சஜித் தலைமையில் தீயணைப்பு, வருவாய்த்துறை, மருத்துவத்துறை , குளச்சல் நகராட்சி உள்ளிட்ட அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகள் முகாமிட்டு இருந்தனர். கொட்டில்பாடு கிராமத்தில் அதிகாரிகளின் உத்தரவின்படி முதலில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து தீயணைப்பு, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மீட்பு பணி ஒத்திகை நடந்தது.

ஒத்திகையின் போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களை மீட்டு வாகனத்தின் மூலம் குளச்சல் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் அமைந்துள்ள சுனாமி கட்டிடத்திற்கு அழைத்து வரப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், சப்-கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், கொட்டில்பாடு பங்குத்தந்தை மரியசெல்வன், செஞ்சிலுவை சங்க மாநில நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ்குமார், குளச்சல் மின்வாரிய உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, கடலோர காவல்படை சப்-இன்ஸ்பெக்டர் மரிய ஜாண் கிங்ஸ்லி, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

தொடர்ந்து பொதுமக்கள் தங்கவைக்கப்பட்ட கட்டிடத்திற்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே வந்தார். பின்னர் ஒத்திகை நிகழ்ச்சி முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். பொதுமக்கள் உதவியுடன் தத்ரூபமாக இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

இதேபோல் கன்னியாகுமரி அருகே ஆரோக்கியபுரம் கடற்கரை கிராமத்தில் நேற்று காலை 8.30 மணியளவில் சுனாமி பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு முன்எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவித்தனர்.

அப்போது, கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமையில் 25-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சைரன் ஒலி எழுப்பியபடி கிராமத்திற்குள் வந்தனர். மேலும், கடற்கரை பகுதி, உயரமான கட்டிடங்களில் பொதுமக்கள் சிக்கி தவிப்பது போலவும், அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பது போலவும் ஒத்திகை நடத்தப்பட்டது. சுனாமியில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை மீட்பது போல தத்ரூபமாக நடந்த இந்த ஒத்திகை நிகழ்ச்சி பரபரப்பாக பேச வைத்தது.

Next Story