பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி - பள்ளி பஸ் கட்டணம் ரூ.75 உயருகிறது


பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி - பள்ளி பஸ் கட்டணம் ரூ.75 உயருகிறது
x
தினத்தந்தி 5 Sep 2018 10:45 PM GMT (Updated: 5 Sep 2018 9:35 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மும்பையில் பள்ளி பஸ் கட்டணத்தில் ரூ.75 உயர்த்த பள்ளி பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்து உள்ளது.

மும்பை,

பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளை அவதியுற வைத்து உள்ளது. அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமானிய மக்களையும் வேதனை அடைய வைத்து உள்ளது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலியாக மும்பையில் பள்ளிக்கூட பஸ் கட்டணத்தை உயர்த்த பள்ளி பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்து உள்ளது.

இதுபற்றி பள்ளிக்கூட பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் அனில் கார்க் கூறுகையில், ‘‘பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் உயர்ந்து உள்ளது. பள்ளி பஸ்களை பராமரிக்கும் செலவும் இரு மடங்கு அதிகரித்து உள்ளது. கடந்த 5 மாதங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் முறையே ரூ.4.66 மற்றும் ரூ.6.35 உயர்ந்து உள்ளது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு பள்ளி பஸ்களின் மாதாந்திர கட்டணத்தில் ரூ.75 அதிகரிக்க முடிவு செய்து உள்ளோம். இது அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி முதல் வசூலிக்கப்படும்’’ என்றார்.

மும்பையில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி பஸ்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story