பாதாளத்தை நோக்கி பாயும் பனைத்தொழில்


பாதாளத்தை நோக்கி பாயும் பனைத்தொழில்
x
தினத்தந்தி 6 Sept 2018 10:26 AM IST (Updated: 6 Sept 2018 10:26 AM IST)
t-max-icont-min-icon

‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன் செத்தாலும் ஆயிரம் பொன்’ என்று சொல்வார்கள். இது, யானைக்கு மட்டுமல்ல பனைக்கும் பொருந்தும்.

அடி முதல் நுனி வரை அத்தனையும் பயன் தரக்கூடிய ஒரு மரம் இருக்குமேயானால் அது பனைமரம் தான். இது, ஒரு கற்பக விருட்சம். கதர் மற்றும் சிற்றூர் குழுமம் நடத்திய கணக்கெடுப்பில், தமிழகத்தில் 5 கோடி பனைமரங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பனைமரத்தில் ஆண், பெண் என 2 வகை உள்ளன. ஆண் பனையை அலகு பனை என்றும், பெண் பனையை பருவபனை என்றும் அழைப்பர். ஆண், பெண் பனைமரங்களில் இருந்து பதனீர் இறக்கலாம். பனைமரங்களிலும் குறிப்பிட்ட காலத்தில் பாளைகள் வரும்.பாளைகள் வந்தவுடன் மரத்தில் ஏறி அதனை நைய்க்க வேண்டும். இதற்கு ‘கடிப்பு’ பயன்படுத்தப்படுகிறது. கடிப்பு என்பது இரு கம்புகள் ஒரு முனையில் மட்டும் கட்டப்பட்டிருக்கும். அதற்கு இடையே பாளையை வைத்து நைய்ப்பர்.

ஒவ்வொரு பாளையையும் 3 நாட்கள் தொடர்ந்து நைய்க்க வேண்டும். 4-வது நாள் பாளையை சீவி விட்டால், அதில் இருந்து பதனீர் சொட்டு சொட்டாக விழும். பதனீர் கீழே சிந்தாத வகையில் பாளையில் மட்டையோடு சேர்த்து மண் கலயங்களை கட்ட வேண்டும். தினமும் காலை, மாலை பனைமரத்தில் ஏறி பாளைகளை சீவி விட வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினருக்கு பதனீருக்கும், கள்ளுக்கும் உள்ள வித்தியாசம் தெரிவதில்லை. பாளையை ஒட்டி கட்டப்பட்ட மண் கலயத்தில் தினமும் சுண்ணாம்பு தேய்க்க வேண்டும். அப்படி தேய்க்காமல் விட்டு விட்டால் அது கள் ஆக மாறி விடும். இனிப்பு தன்மை மறைந்து புளிப்பாகி விடும். சுருக்கமாக சொன்னால் மண்கலயத்தில் சுண்ணாம்பு தேய்த்தால் பதனீர், தேய்க்காமல் விட்டு விட்டால் கள்.

கருப்புக்கட்டி மட்டுமின்றி பல்வேறு பொருட்களை தயாரிக்க பதனீர் ஆதாரமாக உள்ளது. ஒவ்வொரு பனைமரத்தில் இருந்தும் சேகரிக்கப்பட்ட பதனீர், ஒரு பெரிய பாத்திரத்தில் (அண்டா) மொத்தமாக ஊற்றப்படும். பின்னர் பதனீரை சூடேற்றி காய்ச்சுவர். வெப்பநிலைக்கு ஏற்ப கொதி பதனீர், கூழ் பதனீர் ஆகிய நிலையை கடந்து கருப்புக்கட்டி தயாரிப்பதற்கான பருவத்தை அடையும்.

அதன்பிறகு தீயை அணைத்து விட்டு, பாத்திரத்தில் இருந்து பொன்னிறத்திலான கூழ் போன்ற நிலையில் இருப்பதை இறக்கி துடுப்பு போன்ற மட்டையினால் கிளறி விடுவர். அதன்பிறகு தேங்காய் சிரட்டையில் அதனை ஊற்றி சிறிதுநேரம் காய வைத்தால் கருப்புக்கட்டி தயாராகி விடும். கருப்புக்கட்டியை கெட்டியாகவும், பானையில் ஊற்றி கூழ் போன்றும் பயன்படுத்தலாம்.

இதுமட்டுமின்றி சுக்கு, ஏலக்காய், எள், நிலக்கடலை, பொட்டுக்கடலை, பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களையும் பதனீரோடு சேர்த்து காய்ச்சி கருப்புக்கட்டியாக தயாரிப்பர். பதனீரில் இருந்து பனங்கற்கண்டு தயாரிக்கலாம். இதேபோல் பனைஓலையின் மூலம் அழகு சாதன பொருட்களை தயாரிக்கலாம். கூரை வேய பயன்படுத்துவர். பண்டைக்கால இலக்கியங்கள் உயிர்ப்பெறுவதற்கு ஓலைச்சுவடிகளாய் பனையோலை காரணமாய் இருந்தது.

பனைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய மற்றொரு உணவுப்பொருள் நுங்கு. பெண் பனையில் இருந்து மட்டுமே இந்த நுங்கு கிடைக்கும். பனைமரத்தில் நுங்கு வெட்டாமல் விட்டு விட்டால் அது பழமாக மாறி விடும். அதனை சுட்டோ, அவித்தோ சாப்பிடலாம். அதன் சுவையும், நறுமணமும் மீண்டும் ருசிக்க தூண்டும் தன்மை கொண்டது.

ஒவ்வொரு பனம்பழத்திலும் விதைகள் இருக்கும். அதனை மணல் பாங்கான இடத்தில் புதைத்து வைத்தால் கிழங்கு கிடைக்கும். பனங்கிழங்கை சுட்டு அல்லது அவித்து உண்ணலாம். அதனை துண்டு துண்டாக நறுக்கி மாவாக்கி சாப்பிடலாம். அதில் புட்டு செய்தும் சிலர் சாப்பிடுவர். கிழங்கை தோண்டி எடுக்கும் போது, அதனோடு விதையும் சேர்ந்து இருக்கும். அந்த விதையை இரண்டாக வெட்டி பார்த்தால் உள்ளே தேங்காய் போன்ற பொருள் இருக்கும். இதற்கு ‘தவுண்’ என்று பெயர். சுவை மிகுந்த தவுணுக்கு மருத்துவ குணமும் உண்டு. பனங்கிழங்கை அப்படியே விட்டு விட்டால் அது மீண்டும் மரமாகி விடும். முதலீடு, தண்ணீர், உரம், மருந்து எதுவும் இல்லாமல் வளரக்கூடிய ஒரு மரம், பனைமரம் தான். சிறிய அளவிலான பனையை ‘வடலி’ என்று அழைப்பர்.

பனைமரத்துக்கும், மனித சமுதாயத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை வடலி பறை சாற்றுகிறது. அதாவது, கிராமங்களில் இளம் வயதினரை விடலை பருவத்தினர் என்று அழைப்பதை பார்த்து இருக்கிறோம். இதேபோல் சிறிய பனையை வடலி என்று அழைக்கப்படுகிறது. வடலி என்ற சொல்லில் இருந்தே ‘விடலை’ என்ற சொல் உருவாகி உள்ளது. இதேபோல் பனைமர தொழிலாளர்கள் அன்றாடம் பயன்படுத்துகிற பெரும்பாலான பொருட்கள் காரணப்பெயர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சிறப்புகளுக்கு சொந்தமான பனைமரமும், பனைமர தொழிலாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டிருப்பது வேதனையின் உச்சம். வருங்காலத்தில் இது, மனித சமுதாயத்துக்கு பேரிழப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்று கருத்து இல்லை. பனைமரத்தொழில் நலிவடைவதற்கு பல காரணங்கள் உள்ளன.

குறிப்பாக பனைமரத்தொழில் ஒரு கடினமான தொழில். இதில் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இது, ஒருவர் சார்ந்த தொழில் அல்ல. ஒட்டுமொத்த குடும்பத்தினரும் வேலை செய்ய வேண்டும். பனைமரத்தொழிலாளர்களுக்கு சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைப்பதில்லை. இந்த தொழிலில் ஈடுபடுவோருக்கு பெண் கொடுக்க கூட பலர் முன்வருவதில்லை. ஓங்கி உயர்ந்த பனையில் ஏறுவது தொழிலாக இருந்தாலும், வறுமை என்பது இவர்களின் நிரந்தர சொத்தாகவே இருக்கிறது.

ஒவ்வொரு பதனீர் சீசன் காலத்திலும் போலீஸ் கெடுபிடி அதிகரித்துள்ளது. விசாரணை என்ற பெயரில் போலீசாரால் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவது வாடிக்கையாகி விட்டது. சில சமயத்தில் கள் விற்பனை செய்ததாக பொய் வழக்கு போட்டு சிறைச்சாலையின் படிக்கட்டுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். போலீசாரால் மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த தொழிலை விட்டே ஓட்டம் பிடித்தவர்கள் பலர் உண்டு.

பதனீர் இறக்குவது என்பது ஒரு தொடர் வேலை. பனைமரத்தில் ஏறி ஒரு நாள் பாளையை சீவி விடாவிட்டாலும் பதனீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும். இன்றைக்கு இல்லையென்றால் நாளை வேலை செய்து கொள்ளலாம் என்று, பிற தொழிலை போல இத்தொழிலை கருத முடியாது. இதுபோன்ற காரணத்தினால், தனக்கு பிறகு தனது குழந்தைகள் இந்த தொழிலை தேர்வு செய்து விடக்கூடாது என்பதில் பனைமரத்தொழிலாளர்கள் உறுதியாக உள்ளனர். இதுவே, இளைய தலைமுறையினருக்கு பனைமரத்தொழிலை வெகுதூரமாக்கி விட்டது.

இன்றைய காலத்தில் பெருகி வரும் நோயினால் பாரம்பரிய உணவுப்பொருட்களை தேடி மக்கள் பயணித்து கொண்டிருக்கின்றனர். அதன்படி பனைபொருட்கள் மீதும் மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும். பனைமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய முன்வர வேண்டும்.

கள் விற்பனை செய்ய அனுமதி அளித்தால் இந்த தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இது தொடர்பாக ஆராய்ந்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும். பாதாளத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் பனைமரத்தொழிலுக்கு புத்துயிர் ஊட்ட வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. இல்லையெனில், காட்சி பொருட் களின் பட்டியலில் பனைமர பொருட்களும் இடம் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

-தாமிரன்

Next Story