குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் முத்தரசன் பேட்டி


குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 7 Sept 2018 4:45 AM IST (Updated: 7 Sept 2018 12:09 AM IST)
t-max-icont-min-icon

குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

திருத்துறைப்பூண்டி,


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை, விடுதலை செய்ய முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அனைத்து அரசியல் கட்சிகளும் 7 பேரையும் விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழக அரசு வேண்டுமானால் 7 பேரையும் விடுதலை செய்து கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆகையால் காலம் தாழ்த்தாமல் 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.


காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆறு, வாய்க்கால்களை தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. முக்கொம்பு அணை உடைந்து பல நாட்களாகி விட்டது. தமிழக அரசு விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்கள் அனைத்து கடைகளிலும் தங்கு தடையின்றி கிடைக்கின்றன. இதுதொடர்பாக நடைபெற்ற சோதனையில் சிக்கிய டைரியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதற்கு, யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்படுகிறது? என்பது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.


குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதில் முக்கிய ஆவணங்கள் கைபற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய அவர் உடனடியாக பதவி விலகி, வழக்கை சந்திக்க வேண்டும். இல்லையென்றால் முதல்–அமைச்சர் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அதேபோல் தமிழ்நாடு காவல்துறை தலைவர் ராஜேந்திரனையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் விசாரணை முறையாக நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story