கூடலூர் பகுதிகளில் நெற்பயிர்களை நாசம் செய்யும் எலிகள்
கூடலூர் பகுதிகளில் உள்ள வயல்களில் நெற்பயிர்களை எலிகள் நாசம் செய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலூர்,
தேனி மாவட்டம் கூடலூர், ஒட்டாண்குளம், கப்பாமடை, தாமரைகுளம், வெட்டுக்காடு, ஒழுகுவழிச்சாலை ஆகிய பகுதிகளில் தற்போது முதல் போக நெல் நடவுப்பணிகள் முடிந்துள்ளன. பயிர்கள் நன்கு வளர்ந்து பச்சைபசேலென காட்சியளிக்கின்றன.
ஆனால் நெற்பயிர்களை எலிகள் கடித்து நாசம் செய்வதால் மகசூல் இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே பயிர்களை நாசம் செய்யும் எலிகளை பிடித்து அழிக்க விவசாயிகள் முடிவு செய்தனர். இதற்காக ‘பொறி’ வைத்து எலிகளை விவசாயிகள் பிடிக்கின்றனர்.
இதற்காக கம்புகள் மற்றும் சைக்கிள் டியூப்பின் ஒரு பகுதி ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர். இந்த கம்புகளை ஒரு புதிய முறையில் இணைத்து சைக்கிள் டியூப்பின் ஒரு பகுதி மூலம் கட்டுகின்றனர். பின்னர் அதனை நன்கு வளர்ந்துள்ள நெற்பயிர்களுக்கு நடுவே ஊன்றி வைக்கின்றனர்.
அதனை சுற்றிலும் நெல், நிலக்கடலை, தேங்காய்துண்டுகளை தண்ணீரில் மூழ்காத வகையில் போடுகின்றனர். இதனை சாப்பிடுவதற்காக எலி வரும்போது கம்புகளில் மீது அதன் உடல் பட்டதும் அந்த சைக்கள் டியூப்பில் இருந்து ஒரு கம்பு விடுவிக்கப்படுகிறது.
அப்போது அந்த கம்புகளுக்குள் எலி சிக்கிக்கொள்கிறது. இதனால் எலிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க முடியும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
Related Tags :
Next Story