செங்குன்றம் அருகே லாரி மோதி பள்ளி ஆசிரியை பலி


செங்குன்றம் அருகே லாரி மோதி பள்ளி ஆசிரியை பலி
x
தினத்தந்தி 7 Sept 2018 3:30 AM IST (Updated: 7 Sept 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றம் அருகே, இருசக்கர வாகனம் மீது லாரி மோதி தனியார் பள்ளி ஆசிரியை பரிதாபமாக இறந்தார்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் ஆசீர்வாதம். இவருடைய மனைவி புஷ்பாகிருஷ்டினா(வயது 32). இவர், சென்னை கொடுங்கையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு ஆசிரியை புஷ்பாகிருஷ்டினா, செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரை சேர்ந்த தன்னுடன் வேலை பார்க்கும் சக ஆசிரியை ஒருவரின் வளைக்காப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

செங்குன்றத்தை அடுத்த தண்டல்கழனி ஜி.என்.டி. சாலையில் சென்றபோது, செங்குன்றத்தில் இருந்து புழல் நோக்கி வந்த லாரி எதிர்பாராதவிதமாக ஆசிரியை சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஆசிரியை புஷ்பாகிருஷ்டினா, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வினோத்(38) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story