மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை + "||" + Women's Siege of Dindigul Corporation Office

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல், 

ஆத்தூர் காமராஜர் அணை, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவை திண்டுக்கல் நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக திகழ்கின்றன. நகரின் சில பகுதிகளில் வாரத்துக்கு ஒருமுறையும், பல பகுதிகளில் 2 வாரத்துக்கு ஒருமுறையும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதை தவிர்த்து நகர் முழுவதும் சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு புதிதாக குழாய்கள் பதிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஜப்பான் நாட்டு நிதிஉதவியுடன் ஆத்தூர் அணை முதல் திண்டுக்கல் வரையுள்ள பிரதான குழாய், நகர் முழுவதும் உள்ள பகிர்மான குழாய்கள் புதிதாக பதிக்கப்பட்டன. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் புதிய குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே பருவமழை பொய்த்ததால் ஆத்தூர் அணை வறண்டு விட்டது.

இதனால் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை மட்டுமே முழுமையாக நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வறண்ட ஆத்தூர் அணை, புதிய குழாயில் சோதனை ஓட்டம் ஆகிய காரணங்களால் நகரின் சில பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சியின் 15-வது வார்டு பகுதியான குறிஞ்சிநகரில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த பகுதியிலும் புதிதாக குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கடந்த 3 மாதங்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த குறிஞ்சிநகர் பெண்கள் நேற்று, மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் குடிநீர் வினியோக பிரிவு, புதிய குழாய் பதித்தல் பிரிவு அலுவலகங்களுக்குள் உள்ளே சென்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

மேலும், கடந்த 3 மாதங்களாக 30 நிமிடங்கள் கூட குடிநீர் வருவதில்லை. இதனால் விலைக்கு குடிநீர் வாங்குகிறோம். எனவே, சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது புதிதாக பதிக்கப்பட்ட குழாய்களை இணைக்கும் பணி நடப்பதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது, அதை சரிசெய்து குடிநீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பெண்கள் திரும்பி சென்றனர்.