ராணி பங்களா புதுப்பிக்கப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்படும்


ராணி பங்களா புதுப்பிக்கப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்படும்
x
தினத்தந்தி 6 Sep 2018 9:45 PM GMT (Updated: 6 Sep 2018 8:09 PM GMT)

ஆரணியில் பாழடைந்த ராணிபங்களா தொல்லியல் துறை மூலமாக புதுப்பிக்கப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றியமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார்.

ஆரணி, 

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று ஆரணிக்கு வந்தார். இங்கு பூசிமலைகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பாழடைந்த ராணி பங்களாவை அவர் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள ராணி பங்களாவை அனைவரும் வியப்பாக பார்த்தனர். ஆனால் இன்று இந்த பங்களா பாழடைந்து காணப்படுகிறது. இந்த பங்களாவை தொல்லியல் துறை மூலமாக பாதுகாக்கவும், புதுப்பிப்பதற்கான மதிப்பீடும் செய்யப்பட்டு வருகிறது. இதனை சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக உடனடியாக சுற்றுச்சுவர் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆரணி காந்தி ரோடில் வியாபாரிகள் பாதசாரிகளுக்காக அமைக்கப்பட்ட நடைபாதை முழுவதையும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், பழ வியாபாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட பழ வளாகத்தில் அவர்கள் வியாபாரம் செய்வதற்கு ஏற்றவாறு காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக ஆரணி வட்டத்தில் அரியப்பாடி, எஸ்.வி.நகரம், எஸ்.யு.வனம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளையும், ஆரணி சூரியகுளத்தை சீரமைக்கும் பணியையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவருடன் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கோதண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி, எம்.பாண்டியன், க.கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் கிருஷ்ணசாமி, ஆரணி நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் உள்பட பலர் சென்றனர். 

Next Story