தொட்டியபட்டி ஏரியை தூர்வாரும் பணி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்


தொட்டியபட்டி ஏரியை தூர்வாரும் பணி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Sep 2018 10:45 PM GMT (Updated: 6 Sep 2018 8:14 PM GMT)

தொட்டியபட்டி ஏரி தூர்வாரும் பணியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

லாலாப்பேட்டை,

கிருஷ்ணராயபுரம் வட்டம், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி தொட்டியபட்டியில் பொதுமக்கள் பங்களிப்புடன் ஏரி தூர் வாரும் பணி நடைபெறுகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பூமி பூஜையிட்டு பணியை தொடங்கி வைத்தார். பின்னர் பசுபதிபாளையம், குளத்துப்பாளையம் பகுதியில் குகை வழிப்பாதை மற்றும் ஐந்துரோடு அண்ணா வளைவு பழைய நீதிமன்றம் அருகில் உள்ள பாதாளச்சாக்கடையை பார்வையிட்டார். அப்போது அமைச்சர் பேசியதாவது:-

பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி, மழைக்காலங்களில் வருகிற நீர் வீணாக சென்றுவிடுகிறது. பொதுமக்களின் பங்களிப்புடன், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரின் சொந்த நிதியிலிருந்து ஏரியை தூர் வாரி இப்பகுதியில் மரங்களை வளர்க்க மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் இன்று (நேற்று) பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் நீர் தேங்குவதால் நிலத்தடி நீரின் அளவு உயரும். விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

120 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஏரி தூர்வாரப்படுவதால் சுமார் 450 ஏக்கர் அளவிலான நிலம் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடிமராமத்து திட்டத்தின் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்து ஏரி, குளங்களையும் தூர்வாரி கிராமப்பகுதிகளிலுள்ள வறட்சியான நிலங்களுக்கு அந்த தண்ணீர் பயன்படும் வகையில் செயல்படுத்தியிருக்கிறார். ஏரியின் உட்புறமுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, கரைகளை பலப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் பசுபதிபாளையம் ரெயில்வே பகுதியில் குகை வழிப்பாதை ரூ.79 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலும், குளத்துப்பாளையம் ரெயில்வே பகுதியில் குகை வழிப்பாதை ரூ.1 கோடியே 93 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மிக விரையில் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். சர்ச்கார்னர் பகுதியிலிருந்து ஐந்து ரோடு பகுதி வரை பாதாள சாக்கடையில் பழைய பைப்லைன் பழுதடைந்துள்ளதால் அதனை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அப்பணிகள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி (கரூர்), லியாகத் (குளித்தலை), கரூர் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் நக்கீரன், சேலம் மண்டல நகராட்சி செயற்பொறியாளர் பாண்டுரங்கன், வட்டாட்சியர் பழனி (கிருஷ்ணராயபுரம்), கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அ.தி.மு.க. மாவட்ட தொழிற்சங்க செயலாளர் பொரணி கணேசன், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மணி, பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story