ஜெகதாபி அரசு பள்ளியை சிறந்த மாதிரி பள்ளியாக மாற்ற ரூ.50 லட்சத்தில் பல்வேறு வசதிகள்


ஜெகதாபி அரசு பள்ளியை சிறந்த மாதிரி பள்ளியாக மாற்ற ரூ.50 லட்சத்தில் பல்வேறு வசதிகள்
x
தினத்தந்தி 7 Sept 2018 4:00 AM IST (Updated: 7 Sept 2018 1:48 AM IST)
t-max-icont-min-icon

ஜெகதாபி அரசு மேல்நிலைப்பள்ளியை சிறந்த மாதிரி பள்ளியாக மாற்ற ரூ.50 லட்சத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்படுகிறது. வரும் கல்வி ஆண்டிலிருந்து எல்.கே.ஜி. ஆங்கில வழி வகுப்பு தொடங்கப்படவுள்ளது.

வெள்ளியணை,

கரூர் மாவட்டம் ஜெகதாபியில் நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்த அரசு பள்ளி கடந்த 2002-ம் ஆண்டு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 2013-ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியானது. தற்போது இந்த பள்ளியில் ஜெகதாபி, அய்யம்பாளையம், செல்லாண்டிபுரம், பழனிசெட்டியூர், உடையாபட்டி, பொம்மணத்துபட்டி, துளசிகொடும்பு, பால்வார்பட்டி, திருமலைநாதன்பட்டி, ஓந்தாம்பட்டி மற்றும் அருகிலுள்ள திண்டுக்கல் மாவட்டம் லந்தக்கோட்டை, முத்தக்காபட்டி ஆகிய பகுதிகளில் இருந்து வந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கல்வியில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து இப்பள்ளிக்கு வரும் மாணவ- மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் தீனதயாளன் தலைமையில், ஆசிரியர்கள் கற்பித்தலிலும், பல்வேறு திறமைகளை வளர்த்தலிலும் அக்கறையுடன் செயல்படுவதால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதமும், சேர்க்கை எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டு வருகிறது.

இந்த ஆண்டு அரசு பொது தேர்வில் 10-ம் வகுப்பு 98 சதவீதம், 11-ம் வகுப்பு 100 சதவீதம், 12-ம் வகுப்பு 99 சதவீதம் என மாணவர்களின் தேர்ச்சி பெற்று உள்ளதால் இப்பள்ளியின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் படித்த தங்கள் குழந்தைகளை இடமாற்றி பெற்றோர்கள் சிலர் இப்பள்ளியில் சேர்த்துள்ளனர். மேலும் மாணவர்களுக்கு குடிநீர் வசதி, பள்ளியின் பாதுகாப்புக்காக கம்பி வேலி அமைத்தல் ஆகியவற்றுக்கு தலைமை ஆசிரியர் தீனதயாளன் தனது சொந்த நிதியை பயன்படுத்தி செய்துள்ளார். அவ்வப்போது பள்ளிக்கு தேவையான உபகரணங்களை ஊர் பொதுமக்களும் அன்பளிப்பாக வழங்கிவருகின்றனர். இப்படி இப்பள்ளியின் செயல்பாடுகள் பலரின் பாராட்டையும் பெற்று வருவதை அறிந்த தமிழக அரசு இப்பள்ளியை அனைத்து வசதிகளையும் கொண்ட சிறந்த மாதிரி பள்ளியாக மாற்ற முடிவு செய்து ரூ.50 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்ள அனுமதி அளித்து உள்ளது.

அதன்படி பள்ளியின் வெளிப்புற வளாகம் பசுமை புல்வெளி தளமாகவும், இணையதள வசதியுடன் கூடிய “ஸ்மார்ட்” வகுப்பறைகளும், நவீன உள்கட்டமைப்புடன் கூடிய இயற்பியல், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் ஆய்வகங்களும், வகுப்பறைகள் மற்றும் வெளிப்புற தளங்களை கண்காணிக்க சி.சி.டி.வி. கேமரா, தலைமை ஆசிரியர் அறையிலிருந்து ஒவ்வொரு வகுப்புக்கும் தகவல்களை சொல்ல தனித்தனி ஒலிப்பெருக்கி, குடிநீருக்கு ஆரோ வாட்டர் சிஸ்டம், மாணவர்களின் பயன்பாட்டுக்கு மேலும் அதிக எண்ணிக்கையில் கம்ப்யூட்டர்கள், நவீன கழிப்பிட வசதி, புதிய வடிவில் மாணவர்களின் சைக்கிள் நிறுத்துமிடம், தனித்தனி கேபின் கொண்ட அலுவலகம் என தனியார் பள்ளிகளை மிஞ்சும் வண்ணம் வசதிகள் பெற உள்ளது. இதேபோல் கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து விளையாட தனித்தனி மைதானமும், ஓட்டப்பந்தயத்திற்கு தனி ஓடுதளமும் அமைக்கப்பட உள்ளது. பள்ளி நூலகம் மாணவர்கள் வசதியாக அமர்ந்து படிக்கும் வண்ணம் மாற்றம் பெற உள்ளது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக வரும் கல்வி ஆண்டிலிருந்து எல்.கே.ஜி. ஆங்கில வழி வகுப்பு தொடங்கப்படவுள்ளது. இவ்வளவு வசதிகளை பெற்று தங்கள் ஊர் பள்ளி நவீனமாவதை அறிந்த பெற்றோர்களும், பொதுமக்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்து அரசுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.

Next Story