அனுமதியின்றி செயல்பட்ட காப்பகத்தில் இருந்து 7 குழந்தைகள் மீட்பு
சோளிங்கரில் அனுமதியின்றி செயல்பட்ட குழந்தைகள் காப்பகத்திலிருந்து 7 குழந்தைகள் மீட்கப்பட்டனர். காப்பக உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் சோளிங்கரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் கார்த்திக் (வயது25). இவர் சோளிங்கரில் சங்கர் பழனியப்பா குழந்தைகள் இல்லம் என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்துள்ளார். ஆனால் குழந்தைகள் காப்பகம் நடத்த அனுமதிபெறவில்லை.
இந்த காப்பகத்தில் 6 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என மொத்தம் 7 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காப்பகத்தில் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். குழந்தைகள் காப்பகம் அனுமதியின்றி இயங்குவது குறித்து வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு புகார் வந்தது.
அதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அனுமதியின்றி காப்பகம் செயல்படுவதும், அங்கு 7 குழந்தைகள் தங்கியிருப்பதும் தெரியவந்தது. உடனடியாக அங்கு தங்கியிருந்த 6 ஆண் குழந்தைகள் உள்பட 7 பேர் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட 7 குழந்தைகளும் குழந்தைகள்நல குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து சோளிங்கர் போலீசில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமதியின்றி குழந்தைகள் காப்பகம் நடத்திய கார்த்திக்கை கைதுசெய்தனர்.
Related Tags :
Next Story