கூடலூரில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
கூடலூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வழங்க தடை செய்யப்பட்டது. மேலும் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதித்து, வசூலிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் புழக்கத்தில் விடப்படுகிறது. இதனால் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். இதற்கிடையே மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் குழு அடங்கிய பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் கூடலூர் நகராட்சி பகுதியில் நேற்று மதியம் 2 மணிக்கு பறக்கும் படையினர் ஒரே நேரத்தில் பல பிரிவுகளாக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதில் சிலரிடம் இருந்து அதிகமான அபராத தொகையை வசூலித்துவிட்டு வழங்கிய ரசீதில், அதைவிட குறைவான தொகை வசூலிக்கப்பட்டதாக குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு வியாபாரிகள் திரண்டனர். மேலும் அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. தொடர்ந்து முக்கிய சாலைகளில் வழியாக வியாபாரிகள் கண்டன ஊர்வலம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை.
இதையடுத்து கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின்னர் மாலை 6 மணியளவில் ஆர்.டி.ஓ. முருகையன், தாசில்தார் மகேந்திரன் மற்றும் போலீசார் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் இரவு 7 மணிக்கு மேல் கூடலூர் நகரில் கடைகள் திறக்கப்பட்டன. கூடலூரில் திடீரென கடைகள் அடைக்கப்பட்டதால், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். போராட்டம் குறித்து வியாபாரிகள் கூறும்போது, பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்றால், அதன் உற்பத்தியை நிறுத்த வேண்டும். உற்பத்தியை நிறுத்தாமல் கடைகளில் பிளாஸ்டிக் தடுப்பு சோதனை நடத்துவது நியாயமில்லை.
மேலும் அபராத தொகை வசூலிக்கின்றனர். அதற்கு முறையாக ரசீதும் தருவதில்லை. சோதனை என்ற பெயரில் சில அதிகாரிகள் வரம்பு மீறுகின்றனர். இதை நிறுத்தாவிட்டால் இனிவரும் காலங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறும் என்றனர்.
Related Tags :
Next Story